Published : 23 Nov 2024 06:15 AM
Last Updated : 23 Nov 2024 06:15 AM
சென்னை: அதானியுடன் எந்த ஒப்பந்தமும் செய்யவில்லை என்பதற்கு தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
மின்வாரியம் தொடர்பான எவ்வித ஒப்பந்தமும் அதானி குழுமத்துடன் செய்யப்படவில்லை என்ற தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் கருத்துக்கு, தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதானி குழுமத்துக்கும், தமிழக அரசுக்கும் இடையே கடந்த 3 ஆண்டுகளில் எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை. மின்வாரியம் தொடர்பாக எவ்வித ஒப்பந்தமும் மேற்கொள்ளவில்லை. சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரவி வருகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்திருக்கிறார்.
இதுபோன்ற ஊழல் குற்றச்சாட்டை அவர் மறைத்தாலும் அமெரிக்கா நீதிமன்றம் அதானி குழுமத்தின் மீது குற்றம்சாட்டி இருக்கிறார்கள் என்றால் ‘நெருப்பில்லாமல் புகையாது’ என்னும் பழமொழிக்கு ஏற்ப புகாரும், ஊழல் குற்றச்சாட்டும் வரவேண்டியதன் அவசியம் என்ன?
இதன் உண்மை நிலை என்ன என்பதை தமிழக அரசு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும். அதேபோல் நீதிமன்றங்களும் தாமாக முன்வந்து இந்த ஊழல் குற்றச்சாட்டை ஆய்வு செய்து, உண்மையில் ஊழல் நடந்திருக்கிறதா என்பதையும் கண்டறிய வேண்டும். இதற்கான விளக்கத்தை தமிழக அரசு உடனடியாக மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT