Last Updated : 22 Nov, 2024 08:17 PM

 

Published : 22 Nov 2024 08:17 PM
Last Updated : 22 Nov 2024 08:17 PM

புல்மேடு வனப்பாதையில் ‘தடம் மாறி’ தவித்த 3 ஐயப்ப பக்தர்களை மீட்ட பேரிடர் குழு!

புல்மேடு வனப்பாதை வழியாக சபரிமலைக்கு நடந்து சென்ற ஐயப்ப பக்தர்கள். | படம்: என்.கணேஷ்ராஜ்.

குமுளி: சபரிமலைக்கு புல்மேடு வனப்பாதையில் சென்ற 3 ஐயப்ப பக்தர்கள் ‘தடம்மாறி’ காட்டுப்பகுதிக்குள் சிக்கினர். இவர்களை பேரிடர் மீட்புப் படையினர் மீட்டனர். வனப்பகுதியில் எக்காரணம் கொண்டும் தடம்மாறி பயணிக்க கூடாது என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

ஐயப்ப பக்தர்கள் சத்திரம் - புல்மேடு, எருமேலி - பெரியபாதை ஆகிய வனப்பாதைகள் வழியே பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். இது அடர் வனப்பகுதி ஆகும். வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்க குறிப்பிட்ட நேரத்திலே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் ஒவ்வொருநாள் காலையிலும் முதன்முதலாக வனப்பாதையில் நுழையும் பக்தர்களுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு அளித்து வழிநடத்திச் செல்கின்றனர்.

இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த லட்சுமணன் (40), கோடீஸ்வரன் (39), வருண் (20) ஆகியோர் அடங்கிய 17 பேர் கொண்ட குழுவினர் புல்மேடு வழியாக சபரிமலைக்குச் சென்று கொண்டிருந்தனர். இதில் லட்சுமணன், கோடீஸ்வரன், வருண் ஆகியோர் தொடர்ந்து செல்ல முடியாமல் பின்தங்கினர். மெதுவாக வந்து விடுவார்கள் என்று கருதி உடன் வந்தவர்கள் சென்று விட்டனர். சன்னிதானத்தில் காத்திருந்த குழுவினர் நீண்ட நேரமாக 3 பேரும் வராததால் காவல் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

புல்மேடு வனப்பகுதியில் சிக்கியவர்களை அழைத்து வந்த பேரிடர் மீட்பு படையினர்.

இதனைத் தொடர்ந்து பேரிடர் மீட்புப் படையினர் தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது கழுதைக்குழி என்ற இடத்தில் பரிதவித்துக் கொண்டிருந்த மூவரையும் கண்டறிந்தனர். நீண்டநேரமாக வனத்தில் சிக்கி இருந்ததாலும், பயத்திலும், அவர்களுக்கு இலேசான உடல்நிலை பாதிப்பு இருந்தது. இதனைத் தொடர்ந்து அவர்களை கைத்தாங்கலாகவும், டோலி கட்டியும் அழைத்து வந்தனர். பின்பு சன்னிதானம் மருத்துவமனையி்ல் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து உடல்நிலை சீரானதும் தரிசனம் செய்து இன்று சென்னைக்கு குழுவினருடன் சென்றனர்.

இது குறித்து வனத்துறையினர் கூறுகையில், “வனப்பகுதியில் மலையேற்ற வழித்தடம் உள்ளது. இதில் செல்லத்தான் பக்தர்களுக்கு தற்போது வசதி செய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே வழிகாட்டி பலகைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பாதையில் இருந்து எக்காரணத்தைக் கொண்டும் விலகிச் செல்லக் கூடாது. அடர் வனப்பகுதி என்பதால் மீண்டும் பாதையை கண்டுபிடிப்பது சிரமம். ஆகவே உரிய பாதையில் மட்டுமே பக்தர்கள் சென்று வர வேண்டும்” என்றனர்.

சன்னிதானத்தில் 33 பாம்புகள் 93 காட்டுப் பன்றிகள் அகற்றம்: சபரிமலை வனப்பகுதியில் அமைந்துள்ளதால் விலங்குகள் நடமாட்டம் அதிகம் இருக்கும். இந்நிலையில், சன்னிதான பகுதிகளில் இதுவரை 33 பாம்புகளை வனத்துறையினர் பிடித்து காட்டின் உள்புறம் விட்டனர். இதே போல் 93 காட்டுப் பன்றிகளையும் பிடித்து அடர் வனப்பகுதியில் விடப்பட்டதாக வனத்துறை சிறப்பு அதிகாரி லிதேஷ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x