Published : 22 Nov 2024 06:43 PM
Last Updated : 22 Nov 2024 06:43 PM
சென்னை: வீட்டு வேலை செய்து பெற்றோர் படிக்க அனுப்பும் நிலையில் கல்லூரி கூட செல்லாமல் மாணவர்கள் அடிதடியில் ஈடுபடுவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த திருத்தணியை சேர்ந்த மாணவர் சுந்தர், கடந்த அக்.4-ம் தேதி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். அவரை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அக்.9-ம் தேதி மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதையடுத்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களில் சந்துரு என்பவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மாணவர்களுக்கு இடையே ஒற்றுமை ஏற்படுத்துவது குறித்தான வழிகாட்டு நெறிமுறைகளை இந்திய மாணவர் சங்கம் மற்றும் சட்ட பஞ்சாயத்து இயக்கத்தினர் வழங்கினர்.காவல்துறை தரப்பில், “வழக்கின் விசாரணை நிலுவையில் உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பாக மாணவர்கள் மீது 22 வழக்குகள் பல்வேறு காவல் நிலையத்தில் பதியபட்டுள்ளன. மாணவர்களுக்கு இடையேயான மோதல் சம்பவம் தொடர்பான விவரங்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் அதிகப்படியான மாணவர்களின் பெற்றோர்கள் வீட்டு வேலை செய்து படிக்க அனுப்புகின்றனர். ஆனால் கல்லூரி கூட செல்லாமல் மாணவர்கள் அடிதடியில் ஈடுபடுவது வேதனையளிக்கிறது. வழக்கில் உயர்கல்வித்துறைச் செயலரும் இணைக்கப்படுகிறார். மாணவர்களுக்கு இடையேயான மோதல் சம்பவம் தொடர்பாக காவல் துறை மற்றும் ரயில்வே போலீஸாரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டு, விசாரணையை வரும் 26-ம் தேதிக்கு நீதிபதி தள்ளிவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT