Published : 22 Nov 2024 07:12 PM
Last Updated : 22 Nov 2024 07:12 PM
சென்னை: முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு எதிரான நில மோசடி வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சித் தலைவருக்குச் சொந்தமான ரூ.60 லட்சம் மதிப்பிலான நிலத்தை ரியல் எஸ்டேட் அதிபர் தயா பாக்கியசிங் வாங்கியிருந்தார். அவரிடமிருந்து நிலத்தை அபகரிக்கும் நோக்கில் தனது உதவியாளர் பெயருக்கு மாற்றி எழுதி கொடுக்கும்படி முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் மிரட்டல் விடுத்ததாக கூறி தயா பாக்கியசிங் புகாரளித்திருந்தார்.
அதனடிப்படையில் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் உள்ளிட்டோருக்கு எதிராக மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வடசேரி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. நாகர்கோவில் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் தரப்பில் “நில பரிவர்த்தனையான உரிமையியல் புகாரை அரசியல் காரணங்களுக்காக காவல் துறையினர் குற்ற வழக்காக பதிவு செய்துள்ளனர். இரு சாட்சிகளை தவிர மனுதாரருக்கு எதிராக எந்த ஆதாரங்களும் இல்லை,” என வாதிடப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி ,வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில் ஆறு சாட்சிகள் முன்னாள் அமைச்சர் பற்றி கூறியுள்ளனர். அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய முடியாது. எனவே மனுவை தள்ளுபடி செய்வதாக கூறி உத்தரவிட்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT