Last Updated : 22 Nov, 2024 06:04 PM

 

Published : 22 Nov 2024 06:04 PM
Last Updated : 22 Nov 2024 06:04 PM

வேட்டைத் தடுப்புக் காவலர்களை வெளி முகமைக்கு மாற்றும் முடிவை கைவிட முத்தரசன் வலியுறுத்தல்

வேட்டைத் தடுப்புக் காவலர்களை வெளிமுகமைக்கு மாற்றும் முடிவை கைவிட கோரி கோவை மண்டல வனப் பாதுகாவலர் அலுவலகத்தில் மனு அளிக்க திரண்டு வந்த வேட்டை தடுப்புக் காவலர்கள் |  படம்: ஜெ.மனோகரன்.

கோவை: “வனத்துறையில் வேட்டை தடுப்புக் காவலர்கள் வெளி முகமைக்கு மாற்றும் முடிவை அரசு கைவிட வேண்டும்,” என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியுள்ளார்.

தமிழகம் முழுவதும் வனத்துறையின் காப்புக்காடுகள், வன விலங்கு சாரணாலயங்கள், தேசிய பூங்காக்கள், புலிகள் காப்பகங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வேட்டைத் தடுப்புக் காவலர்களாகப் பணியாற்றி வருகின்றனர். இதனிடையே வனத்துறையில் உள்ள வேட்டை தடுப்பு காவலர்கள் பணியை தனியார் வசம் ஒப்படைப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், களக்காடு முண்டந்துறை, மேகமலை, ஆனைமலை, முதுமலை, சத்தியமங்கலம் ஆகிய புலிகள் காப்பகங்களில் பணிபுரியும் வேட்டை தடுப்பு காவலர்கள், இதர பணியாளர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவையில் உள்ள மண்டல வனப்பாதுகாவலர் அலுவலகத்துக்கு இன்று (நவ.22) காலை வந்தனர்.

அப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மாநில பொருளாளர் எம்.ஆறுமுகம் உள்ளிட்டோர் ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநரும், கோவை மண்டல வனப்பாதுகாவலருமான ராமச்சுப்பிரமணியத்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மேலும் தனியார் வசம் ஒப்படைத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கி கூறினர். அந்த மனுவில், வேட்டைத் தடுப்புக் காவலர்கள், இதர பணியாளர்களை வெளி முகமையில் பணி அமர்த்துவதைக் கைவிட வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து இரா.முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழக வனத்துறையில் பணியாற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் பலரும் பட்டதாரிகள் ஆவர். குறிப்பாக பழங்குடியின மலைவாழ் பகுதியை சார்ந்தவர்கள் தான் வேட்டை தடுப்பு காவலர்களாக உள்ளனர். இவர்கள் சட்டவிரோத வன விலங்கு வேட்டையைத் தடுப்பது, வனத்தை விட்டு வெளியேறும் வனவிலங்குகளை வனப்பகுதிக்குள் திருப்பி அனுப்புவது, வனவிலங்குகளை பாதுகாப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் பணியை தமிழக அரசு தனியாரிடம் ஒப்பந்த அடிப்படையில் ஒப்படைக்க திட்டமிட்டு வருகிறது. இதுபோன்று செய்யும் பட்சத்தில் இவர்களுக்கும், வனத்துறைக்கும் உள்ள தொடர்பு துண்டிக்கப்படும். எனவே, உடனடியாக தமிழக அரசு இந்தப் போக்கைக் கைவிட வேண்டும். இதுகுறித்து வனத்துறை உயர் அதிகாரிகளை வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளோம். காலமுறை ஊதியத்தில் பணி அமர்த்துவார்கள் என்ற நம்பிக்கையில் ஆபத்தான பணியில் உள்ளனர்” என்று அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x