Published : 22 Nov 2024 05:30 PM
Last Updated : 22 Nov 2024 05:30 PM

‘நெசவாளர்கள் வீடுகளில் தொழில் வரி விதிக்க கணக்கீடு’ - தமிழக அரசு மீது இபிஎஸ் காட்டம்

எடப்பாடி பழனிசாமி | கோப்புப்படம்

சென்னை: “தமிழகம் முழுவதும் குடிசைத் தொழில்போல ஓரிரு தறிகளை வைத்து நெசவுத் தொழில் செய்து வரும் நெசவாளர்கள் வீடுகளில், தொழில் வரி விதிப்பதற்காக நடத்தப்படும் கணக்கீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்,” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பனிசாமி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் நெசவாளர்களின் நிலைமை அதல பாதாளத்துக்குச் சென்றுள்ளது. கைத்தறி மற்றும் நெசவாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவோம் என்று பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசி ஆட்சியைப் பிடித்த ஸ்டாலினின் திமுக ஆட்சியில் தாறுமாறாக நூல் விலை உயர்ந்ததுடன், விலையில்லா சீருடை, விலையில்லா வேட்டி, சேலை போன்ற திட்டங்களுக்கான பணிகளை முழுமையாக தமிழக நெசவாளர்களுக்கு வழங்காதது போன்ற நிகழ்வுகளால், முதலாளிகளாக சொந்தத் தொழில் செய்து வந்த நெசவாளர்கள், தங்களது தறிகளை பழைய இரும்புக் கடைகளுக்கு விற்றுவிட்டு வேறு தொழில்களுக்கு பணியாட்களாக இடம் மாறி, தங்களது வாழ்க்கையை மிகுந்த சிரமத்துடன் நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக, சேலம், நாமக்கல், ஈரோடு போன்ற பகுதிகளில் தயாரிக்கப்படும் சேலை ரகங்களைப் போன்றே, வெளி மாநிலங்களில் இருந்து போலியாக தரமற்ற சேலைகள் தயாரிக்கப்பட்டு குறைந்த விலைக்கு சந்தையில் விற்பனை செய்யப்படுவதால், உள்ளூர் நெசவாளர்கள் தயாரிக்கும் சேலைகளுக்கு நியாயமான விலை கிடைக்காமல், ஜவுளி தேக்கமடைந்துள்ளன. பல்லாயிரக்கணக்கான தறிகள் இரவு பகலாக இயங்கி வந்த நிலையில், இன்று மூன்றில் ஒரு பங்கு தறிகள் மட்டுமே இயங்குகின்றன.

இதனால் வாரம் முழுவதும் வேலை செய்து வாரக் கூலி பெற்று தினசரி வாழ்க்கையை நடத்தி வந்த நெசவுத் தொழிலாளர்கள், இன்று குறைந்த நாட்களே பணிபுரிந்து மாதக் கூலி பெறுகின்றனர். இதனால், தினசரி செலவுக்கு நெசவுக் கூலியை மட்டுமே நம்பியுள்ள லட்சக்கணக்கான தொழிலாளர்கள் சரியான சம்பளம் இன்றி, தங்களுக்குத் தெரிந்த நெசவுத் தொழிலை விட்டு, வேறு வேலைகளைத் தேடி அலையும் அவல நிலை அதிகரித்துள்ளது.

நெசவாளர்களில் பலர், தாங்கள் வாழும் வீடுகளிலேயே ஓரிரு தறிகள் வைத்து குடிசைத் தொழில்போல் தறிகளை இயக்கி அந்த வருமானத்தில் எளிய வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்கள். இந்நிலையில், தமிழகம் முழுவதும் குடிசைத் தொழில்போல ஓரிரு தறிகளை வைத்து நெசவுத் தொழில் செய்து வரும் நெசவாளர்கள் வீட்டில், உள்ளாட்சித் துறை அலுவலர்கள், தறிகள் உள்ள இடங்களைக் கணக்கீடு செய்து அப்பகுதிகளுக்கு வணிக ரீதியில் தொழில் வரி விதிக்கப் போவதாக தகவல்கள் கூறுகின்றன.

குறிப்பாக, சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் இதுபோன்ற குடிசைத் தொழில் செய்துவரும் நெசவாளர்களின் வீடுகளில் உள்ள தறிக் கூடங்களின் அளவை மாநகராட்சி ஊழியர்கள் அளவீடு செய்து வருவதாகவும்; சதுர அடிக்கு 27 ரூபாய் தொழில் வரி விதிக்க உத்தேசித்துள்ளதாகவும் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் தெரிவித்த செய்தி, நெசவாளர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று செய்திகள் வருகின்றன.

கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிப்படையக்கூடாது என்று, 200 யூனிட் மற்றும் 750 யூனிட் விலையில்லா மின்சாரம் வழங்கியது அதிமுக அரசு. நெசவாளர்களுக்கு 10 ஆயிரம் பசுமை வீடுகள் கட்டித் தரப்பட்டன. மேலும், பிரதம மந்திரி வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் கட்டப்படும் வீடுகளில், 10 சதவிகிதம் வீடுகள் நெசவாளர்களுக்கு ஒதுக்கப்படும் என அறிவித்து, பிப்ரவரி 2018 முதல் கைத்தறி நெசவாளர்களுக்கு தலா ரூ. 2.10 லட்சம் வீதம் மானியத்துடன் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. ஆனால், கடந்த 42 மாதகால திமுக ஆட்சியில் இதுவரை நெசவாளர்களுக்கு எந்தத் திட்டத்தின் கீழும் வீடுகள் கட்டித் தரப்படவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

நெசவாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தள்ளுபடி மானியத்தை உடனடியாக வழங்குமாறு ஏற்கெனவே நான் வலியுறுத்தி இருந்தேன். ஆனால், இந்த அரசு இதுவரை மொத்த மானியத் தொகையில் வெறும் 10 சதவீதம் மட்டுமே நெசவாளர்களுக்கு வழங்கி உள்ளதாகவும், மீதமுள்ள 90 சதவீதத்தை இதுவரை விடுவிக்கவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.அதிமுக அரசில் விலையில்லா வேட்டி, சேலை; பள்ளி மாணவர்களுக்கான சீருடை போன்றவை முழுமையாக தமிழக நெசவாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்த திமுக ஆட்சியில் வெளி மாநிலங்களுக்கு அதிக அளவு பணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன என்று செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும், தமிழக நெசவாளர்களுக்கு குறித்த நேரத்தில் தரமான நூல்கள் வழங்கப்படுவதுமில்லை.

பட்டுத் தறி நெசவு செய்பவர்களுக்கு, அதிமுக ஆட்சிக் காலத்தில் எத்தனை தறி வைத்துள்ளனரோ, அத்தனை தறிகள் மூலம் நெய்யும் பட்டுப் புடவைகளுக்கும் முழுமையாக ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. தறிக்கேற்றவாறு முழுமையாக ஆர்டர்கள் வழங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சியில் கோ-ஆப்டெக்ஸ் ஆர்டரே தருவதில்லை. நெசவாளர்கள் வைத்திருக்கும் அனைத்து தறிகளிலும் நெய்த பட்டுப் புடவைகளுக்கான ஊக்கத் தொகையும் வழங்குவதில்லை என்று பட்டு நெசவாளர்கள் வேதனையுடன் தெரிவித்து உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, தொடர்ந்து பட்டு நெசவாளர்கள் நெய்த பட்டுப் புடவைகள் அனைத்துக்கும் ஊக்கத் தொகை வழங்குமாறு வலியுறுத்துகிறேன்.

அதிமுக அரசு மேற்கொண்ட பல்வேறு திட்டங்களினால், தமிழகத்தில் நெசவுத் தொழில் காக்கப்பட்டது. ஆனால் இன்று, குடிசைத் தொழில்போல் வீடுகளிலேயே ஓரிரு தறிகள் வைத்து நெசவுத் தொழில் செய்துவரும் நெசவாளர்களின், தறிக் கூடங்களை அளவெடுத்து தொழில் வரி விதிக்க முனைந்துள்ள ஸ்டாலினின் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அரசு, நெசவாளர்களாகிய தங்களுக்கு உதவி செய்யாவிடினும், உபத்திரம் செய்யாமல் இருந்தால் போதும் என்று மிகுந்த மன வேதனையுடன் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்துகின்றனர்.

எனவே, உடனடியாக தமிழகமெங்கும் இதுபோன்ற தறிகள் உள்ள பகுதிகளை கணக்கீடு செய்யும் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும். நூலுக்கான வரிகளை முழுமையாக நீக்கவும், கைத்தறி மற்றும் விசைத்தறி மூலம் தயாரிக்கப்படும் ஜவுளிகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பில் விலக்கு பெற்று, மீண்டும் தமிழகத்தில் நெசவுத் தொழில் தலைநிமிர்ந்து நிற்பதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்க வேண்டும்,” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x