Published : 22 Nov 2024 05:13 PM
Last Updated : 22 Nov 2024 05:13 PM
விருதுநகர்: “எதிர்க்கட்சிகள் இணைந்து அதானி தொழில்முறைகளை எதிர்த்து 25-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்போம்,” என்று மாணிக்கம் தாகூர் எம்.பி. கூறினார்.
இதுகுறித்து விருதுநகரில் இன்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “அதானி மீது ஊழல் வழக்குப் பதிவு செய்து அமெரிக்கா அவரை தேடி வருகிறது. ஆனால், மோடி தொடர்ந்து அதானியை காப்பாற்றுவதற்கு முயற்சி செய்கிறார். இது நாட்டுக்கு நல்லது கிடையாது. அதானி அமெரிக்காவில் ஒரு தனியார் நிறுவனத்துடன் இணைந்து ரூ.25 ஆயிரம் கோடியை இந்தியாவுக்கு கொண்டுவந்து சோலார் பிளாண்ட் போடப்படும் என்று ஊழல் செய்துள்ளார். மின்சாரம் விற்க மாநில அரசுகளுக்கு ரூ.2,500 கோடி கொடுப்பதாக அமெரிக்க நிறுவனத்தை ஏமாற்றியுள்ளார்.
அதானியின் போக்கு முழுமையாக மோடியால் ஆதரிக்கப்படுகிறது.இதை எதிர்த்து எதிர்க்கட்சிகள் இணைந்து அதானி தொழில் முறைகளை எதிர்த்து 25-ம் தேதி தொடங்கும் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் கொடுப்போம். அதானி ஒப்பந்தம் செய்தபோது இருந்த பிரதமரும், மத்திய அமைச்சரும் இதற்கு பதில் சொல்லியே ஆக வேண்டும். இதை மிக முக்கியமான பிரச்சினையாக நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்.
தஞ்சையில் நடந்த கத்திக்குத்து, நீதிமன்றத்தில் நடந்த தாக்குதல் என்பது தனிப்பட்ட பிரச்சினைகள். ஆனால், இது வருத்தத்துக்கு உரிய சம்பவம். இது சமூகப் பிரச்சினை. இதற்கு காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எடப்பாடி தோல்வி பயத்தில் உள்ளதால் சட்டம் ஒழுங்கு பிரச்சினைக்கும் தனி நபர் பிரச்சினைக்கும் வித்தியாசம் தெரியாமல் பேசுகிறார். கூட்டணி குறித்து பேசும்போது பணம் கேட்கிறார்கள் என முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகிறார். 1999-க்குப் பிறகு அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கவில்லை. பாமக, தேமுதிக மற்ற கட்சிகள்தான் தெளிவான கருத்துக்களைக் கூற வேண்டும்.
மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிக்கு 650 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது. 2009-10ல் வீடு இருந்தவர்களுக்கும் மாநில அரசு நிதி வழங்கியது. தற்போது, அவர்கள் 14 ஆண்டுக்குப் பிறகு மக்கள் நீதிமன்றம் சென்றுள்ளனர். உயர் நீதிமன்றம் மக்கள் பிரச்சினையை புரிந்துகொள்ள வேண்டும். அதோடு, விமான நிலைய விரிவாக்கத்தையும் நினைவில் கொள்ள வேண்டும். நியாயத்தை மக்களுக்கும் வழங்க வேண்டும். விமான நிலைய விரிவாக்கத்திற்கும் வழங்க வேண்டும்,” என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT