Published : 22 Nov 2024 04:25 PM
Last Updated : 22 Nov 2024 04:25 PM

“ரஜினியை நான் சந்தித்து பேசியதும் அரசியலே!” - சீமான் விவரிப்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது குறித்து பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நாடும், மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அரசியல் ஆர்வம் நிச்சயம் இருக்கும். ரஜினிகாந்தை சந்தித்து பேசியிருப்பதும் அரசியல்தான்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 8-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் முக்கிய பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்த நிலையில், நடிகர் ரஜினிகாந்திடம் நேரில் சந்தித்து வாழ்த்து பெறவேண்டும் என சீமான் கோரியிருந்தார். ரஜினிகாந்த் தற்போது நடித்துவரும் ‘கூலி’ படத்தின் படப்பிடிப்புக்காக ஹைதராபாத்தில் இருப்பதாகவும், சென்னை வந்ததும் சந்திக்கலாம் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், ‘கூலி’ பட ஷூட்டிங்கின் முதல் ஷெட்யூல் முடிவடைந்த வீடு திரும்பிய ரஜினிகாந்த் சீமானை தொடர்பு கொண்டு சந்திக்க அழைப்பு விடுத்தார். அதைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை இரவு 8 மணியளவில் சந்தித்து பேசினார். சுமார் அரை மணிநேரத்துக்கு மேல் நீடித்த இந்தச் சந்திப்பின் போது பரஸ்பரம் உடல்நலம் குறித்து இருவரும் விசாரித்து கொண்டனர்.

பின்னர் சமீபத்தில் ரஜினி நடித்து வெளியான ‘வேட்டையன்’ படத்தில் சமூக அக்கறை உள்ள கருத்துகள் கொண்ட வேடத்தில் ரஜினியின் நடிப்பை குறித்து அவருக்கு பாராட்டு தெரிவித்தார். தொடர்ந்து இனி நடிக்கும் படங்களிலும் சமூக அக்கறை உள்ள கருத்துகளை எடுத்துரைக்குமாறும் ரஜினியிடம் சீமான் கேட்டுக்கொண்டார். அரசியல் நிலைப்பாடுகள் குறித்து பேசிய அவர்கள் திமுகவின் ஆட்சி, நடிகர் விஜய்யின் அரசியல் வருகை, 2026 சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாகவும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

ரஜினியுடனான சந்தித்து தொடர்பாக செய்தியாளர்களிடம் சீமான் கூறும்போது, “இது அன்பின் நிமித்தமான சந்திப்பு தான். இதில் திரையுலகம், அரசியல் குறித்து விவாதித்தோம். ரஜினிகாந்த் நிம்மதியாக நல்ல நல்ல படங்களை நடித்து கொண்டிருக்கிறார். என்னைவிட அனுபவம் வாய்ந்தவர். அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு. இது ரஜினியின் மனநிலைக்கு சரிபட்டு வராது என்று தான் முன்பு அவரை விமர்சித்தேன்.

இந்த களத்தில் நேர்மையாக இருப்பது மிகவும் கடினம். ஓர் ஆட்சியாளர் சிறப்பாக ஆட்சிசெய்யும் போது மக்கள் அந்த ஆட்சியை கொண்டாடுவார்கள். இதைத்தான் ரஜினி ‘சிஸ்டம் சரியில்லை’ என்று கூறியிருந்தார். நாடும், மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அரசியல் ஆர்வம் நிச்சயம் இருக்கும். ரஜினிகாந்தை சந்தித்து பேசியிருப்பதும் அரசியல் தான்.

விமர்சனங்களை தாங்க முடியாதவன் விரும்பியதை அடைய முடியாது. சம்பந்திகளை போல முதல்வரும், பிரதமரும் சந்தித்துக் கொள்கின்றனர். ஆனால் வெளியில் எங்களை ‘சங்கி’ என்று சொல்கின்றனர். ‘சங்கி’ என்றால் நண்பன் என்று அர்த்தம். திமுகவை எதிர்த்தாலே ‘சங்கி’ என்றால், அதை பெருமையாக ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.” என்றார் சீமான்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x