Last Updated : 22 Nov, 2024 10:48 AM

11  

Published : 22 Nov 2024 10:48 AM
Last Updated : 22 Nov 2024 10:48 AM

சீமான் எதிர்ப்​பாளர்களை சீவி​விடுவது திமுகவா? - சிதம்​பரம் நிகழ்வுக்கு போட்​டியாக திருச்​சி​யில் மாவீரர் தின கூட்​டம்!

நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் சீமானுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து அக்கட்சியிலிருந்து விலகி வருவது அண்மைக்காலமாக தொடர் நிகழ்வாகி வருகிறது. திருநெல்​வேலியில் அண்மையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் சட்டமன்றத் தொகுதி பொறுப்​பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில் தங்களது குறைகளைச் சொன்ன நிர்வாகிகளை கட்சியின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் ஒருமையில் பேசிய​தாகச் சொல்கிறார்கள். இதனால் வாக்கு​வாதம் ஏற்பட்டு கூட்டத்​திலிருந்து சில நிர்வாகிகள் வெளிநடப்பு செய்தனர்.

கடந்த மக்களவைத் தேர்தலின் போது நெல்லை தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா​வுக்கு தலைமை ஏஜென்டாக இருந்தவர் நெல்லை மாவட்ட இளைஞரணி தலைவர் பார்வின். இவரும் இவரது ஆதரவாளர்​களும் சீமானுக்கு எதிராக குற்றச்​சாட்டுகளை முன்வைத்​தனர். இதற்கு செய்தி​யாளர்​களிடம் பதிலளித்த சீமான், “நேர்​மை​யாளன் என்பவன் சர்வாதிகாரியாகத்தான் இருக்க முடியும். சர்வா​தி​காரியாக இல்லா​விட்டால் கட்சி நடத்த முடியாது” என்று சமாளித்​தார்.

ஏற்கெனவே திருச்சி, மதுரையில் இதேபோல் நாதக நிர்வாகிகள் சிலர் தலைமையை விமர்​சித்து கட்சி​யை​விட்டு வெளியேறி தனி அணியாக திரண்​டிருக்​கிறார்கள். நவம்பர் 27-ம் தேதி சிதம்​பரத்தில் மாவீரர் தின பொதுக்​கூட்​டத்தை பிரம்​மாண்டமாக நடத்த சீமான் தலைமையில் நாதக நிர்வாகிகள் திட்ட​மிட்​டுள்ள நிலையில் அதற்கு போட்டியாக அதே நாளில் திருச்​சியில் மாவீரர் தின பொதுக்​கூட்​டத்தை நடத்த அதிருப்தி நிர்வாகிகள் திட்ட​மிட்டுள்​ளனர்.

திருச்சி மாவீரர் தின பொதுக்​கூட்​டத்தில் சீமானுக்கு எதிரான அதிருப்​தி​யாளர்களை பங்கேற்க வைக்க மாவட்ட வாரியாக நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசி வருகிறது அதிருப்தி கோஷ்டி. ஏற்கெனவே, நடிகர் விஜய்யின் வரவால் நாதக ஓட்டு வங்கியில் ஓட்டை விழுந்​து​விடுமோ என பயந்து போயிருக்​கிறது சீமான் தரப்பு. அந்தப் பதற்றத்​தில், ‘லாரி அடித்துச் சாவான்’ என்கிற அளவுக்கு விஜய்க்கு எதிராக உக்ரமாகி இருக்​கிறார் சீமான்.

இந்த நிலையில், சொந்தக் கட்சிக்​குள்​ளேயும் குடைச்சல் கிளம்பி இருப்​பதால் மேலும் தகித்துக் கொண்டிருக்​கிறார் செந்தமிழன். அதேசமயம், தமிழக அரசியலில் தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்து வரும் சீமானின் கட்சியை சிதைக்க ஆளும் கட்சி தரப்பில் சில சித்து வேலைகள் நடப்ப​தாகவும் நாதக தரப்பில் பல்லைக் கடிக்​கிறார்கள்.

இதுகுறித்து திருநெல்வேலி நாதக நிர்வாகி​களிடம் பேசிய​போது, “ஒவ்வொரு தேர்தலிலும் தனித்தே களமிறங்க முடிவெடுத்து முன்கூட்டியே வேட்பாளர்களை அறிவித்து தமிழக அரசியலில் வித்தி​யாசமான பாதையை முன்னெடுத்து வருகிறார் செந்தமிழன் சீமான். அவருக்கு தமிழர்கள் மத்தியில் குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இதையெல்லாம் ஆளும் கட்சியால் ஜீரணித்​துக்​கொள்ள முடிய​வில்லை. அதனால், நாதக-வுக்குள் சிலரை தூண்டி​விட்டு குழப்பம் விளைவிக்​கிறார்கள்.

வடக்கே பாஜகவினர் மாநிலக் கட்சிகளை இரண்டாக்கி, அந்தக் கட்சிகளின் செல்வாக்கை சரித்து அதன் மூலம் ஆட்சி அதிகாரத்தை அபகரிக்​கவும் தக்கவைத்துக் கொள்ளவும் செய்யும் தந்திரம் போன்றது தான் இதுவும். நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அதே பாணியில் தான் அதிருப்​தி​யாளர்​களுக்கு ‘வேண்டிய’ உதவிகளைச் செய்து திருச்​சியில் மாவீரர் தின பொதுக்​கூட்​டத்தை நடத்த ஆளும் கட்சி​யினர் உதவி செய்ய​வேண்​டும்” என்றனர். தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் இருக்கின்றன. அதற்குள்ளாக எந்தெந்த புற்றுகளில் இருந்து எத்தனை ​பாம்​புகள் கிளம்​புமோ!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x