Published : 22 Nov 2024 01:10 AM
Last Updated : 22 Nov 2024 01:10 AM
சென்னை: திருச்செந்தூர் கோயிலின் ‘தெய்வானை’ உட்பட சில கோயில் யானைகள் வனத்துறை அனுமதியின்றி பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் வனத்துறை அமைச்சர் பொன்முடி கூறியதாவது: மாமல்லபுரம் - புதுச்சேரி இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்க திட்டமிடப்பட்டு, அந்த சாலையின் நடுவே சில இடங்களில் வனத்துறை நிலங்கள் வருவதால் சாலை பணிகள் முழுமை பெறாமல் உள்ளன. அப்பகுதிகளில் வனத்துறை சார்பில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம்.
யானை, புலி உள்ளிட்ட வன உயிரினங்களை பாதுகாக்க வனத்துறை மூலம் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குடியிருப்பு பகுதிகளுக்குள் யானைகள் வருவதை தடுக்க, வனத்துறை சார்பில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
திருச்செந்தூர் கோயில் யானை ‘தெய்வானை’ தாக்கியதில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த யானையை கோயிலில் வைக்க வனத்துறை அனுமதி இல்லை. அந்த யானை அசாமில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், அதை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு வனத்துறைக்கு உள்ளது. கோயில் யானைகளுக்கு அறநிலைய துறைதான் அனுமதி பெற வேண்டும். இதுகுறித்து அந்த துறையிடம் பேசி வருகிறோம்.
கோயில் யானையை கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் தரும் அறிக்கையின் அடிப்படையில், யானையை சிறப்பு முகாமுக்கு அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படும். தமிழக அரசின் மலையேற்ற திட்டங்களை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதில், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம் மேலூர் அடுத்த அரிட்டாபட்டி, உயிர் பன்முகத்தன்மை பகுதியாக திமுக ஆட்சியில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளை வல்லூறு, ராஜாளி போன்ற பல பறவை இனங்கள் அங்கு உள்ளன. அது வனப் பகுதியாக பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே முதல்வரின் நோக்கம். இந்த நிலையில், அங்கு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அடுத்து, தமிழக வனத்துறையிடம் மத்திய அரசு அனுமதி கேட்கும்போது, அந்த திட்டத்தை நிராகரிக்குமாறு தமிழக அரசு சார்பில் வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT