Published : 22 Nov 2024 12:23 AM
Last Updated : 22 Nov 2024 12:23 AM
தஞ்சாவூர்: தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 40 பேர் பணி நியமனம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு அமைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் 13-வது துணைவேந்தராக வி.திருவள்ளுவன் 2021-ம் ஆண்டு டிச.11-ம் தேதி பொறுப்பேற்றார். இவரது பணிக்காலம் டிச. 12-ம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், தமிழக ஆளுநரால் நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். 2017-2018-ம் ஆண்டில் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராக பாஸ்கரன் இருந்தபோது, பேராசிரியர், உதவிப் பேராசிரியர்கள் 40 பேர் பணி நியமனம் செய்யப்பட்டனர்.
இவர்களை தகுதிகாண் பருவம் நிறைவு பெற்றதாகக் கூறி, பணி நிரந்தரம் செய்தது தொடர்பாக பல்கலை. துணைவேந்தர் திருவள்ளு வனிடம் விளக்கம் கேட்கப்பட்டது. ஆனால், துணைவேந்தர் வழங்கிய விளக்கத்தில் திருப்தி இல்லை எனவும், இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, முறைகேடாக பணியில் சேர்ந்தவர்களுக்கு ஆதரவாக இருந்ததாகவும் கூறி துணைவேந்தர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இதுகுறித்து விசாரணை நடத்த, சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.ஜெயச்சந்திரன் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் ஆர்ப்பாட்டம்: இதற்கிடையே, துணைவேந்தரின் பணியிடை நீக்கத்தைக்கண்டித்து தமிழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று மாலை பல்கலைக்கழகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT