Published : 21 Nov 2024 04:03 PM
Last Updated : 21 Nov 2024 04:03 PM

அதானி நிறுவனத்துடன் தமிழ்நாடு மின் வாரியத்துக்கு தொடர்பு இல்லை: அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

கரூரில் புதிததாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி பார்வையிட்டார் 

கரூர்: “தமிழ்நாடு மின் வாரியத்துக்கு அதானி நிறுவனத்தோடு கடந்த 3 ஆண்டுகளாக வணிக ரீதியான தொடர்புகள் இல்லை,” என தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

இது குறித்து கரூரில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, “அதானி குழுமத்தின் மீது அமெரிக்காவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறித்து சமூக ஊடகங்களில் செய்திகளை பார்த்தேன். பல மாநிலங்கள் அதில் குறிப்பிட்டு சொல்லப்பட்ட நிலையில், தமிழ்நாடு என ஒரு வரி சேர்க்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மின்சார வாரியத்தைப் பொறுத்தவரை அதானி நிறுவனத்தோடு எந்தவிதமான வணிக ரீதியிலான தொடர்புகளும் கடந்த 3 ஆண்டுகளாக இல்லை என்பதை தெளிவுப்படுத்தி விடுகிறேன். தமிழ்நாடு மின் தேவையை கருத்தில் கொண்டு மத்திய மின்சார துறையோடு இருக்கும் அமைப்புகளோடு 1,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு அந்த நிறுவனத்துடன்தான் தமிழ்நாடு மின்சார வாரியம் புரிந்துணர்வு செய்துள்ளது.

சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா லிமிடெட் இது மத்திய அரசு நிறுவனம். அந்த நிறுவனங்கள்தான் யாரெல்லாம் உற்பத்தி செய்கிறார்களோ, அவர்கள் அந்த நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்வர். அந்த நிறுவனம் மற்ற மாநிலங்களிடம் என்ன தேவை என்பதைக் கேட்டு விலை இறுதி செய்யப்படுகிறது. அதன்பிறகு தான் அந்தந்த மாநில அரசுகளோடு மத்திய அரசு நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யும். அப்படிதான் அந்நிறுவனத்தோடு மிக குறைந்த விலையில் மிக குறைந்த விலையில் ரூ.2.61-க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதே அதிமுக ஆட்சியில் ரூ.7.01-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் மத்திய அரசின் எரிசக்தி துறையின் அங்கம். அதில்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சமூக ஊடங்களில் தகவல்களை பதிவிடுபவர்கள் இதை தெளிவுபடுத்திக் கொண்டு பதிவிடவேண்டும். என்னிடமோ அல்லது மின் துறை அதிகாரிகளிடடோ கேட்டால் தெளிவுப்படுத்த தயாராக உள்ளோம்,” என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

இதனிடையே, “அதானி குழுமத்தால் லஞ்சம் வழங்கப்பட்ட நிறுவனங்கள் பட்டியலில் தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பெயரும் இடம்பெற்றுள்ள நிலையில், இது குறித்து தமிழக அரசு விசாரணைக்கு ஆணையிட வேண்டும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் - அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆகியோருக்கு இடையிலான ரகசிய சந்திப்பு குறித்தும் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்,” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் விவரம்: ‘ஸ்டாலின் - அதானி ரகசிய சந்திப்பு குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும்’ - ராமதாஸ்

முன்னதாக, கரூர் காமராஜ் மார்க்கெட் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தை ஆட்சியர் மீ.தங்கவேல் தலைமையில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி இன்று (நவ.21) பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, “கரூர் காமராஜ் காய்,கறி மார்க்கெட்டில் வியாபாரம் செய்பவர்கள் தங்களுக்கு புதிய கட்டிடம் கட்டி தரவேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனை அடுத்து ரூ.6.75 கோடியில் 160 கடைகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. 123 கடைகளுக்கான பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள 37 கடைகளுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் டிசம்பர் மாதத்துக்குள் பணிகள் முடிக்கப்படும். வரும் ஜனவரி முதல் அல்லது 2வது வாரத்தில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பயன்பாட்டுக்கு அளிக்கப்படுகிறது. நீதிமன்ற வழக்கு காரணமாக கரூர் மாவட்டத்தில் மீன் மார்க்கெட் தொடங்கி நூலகம், புதிய பேருந்து நிலையம் பணிகள் நடைபெறாமல் உள்ளன.

கரூர் மாவட்ட வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள் தீட்டப்பட்டு, நிதி ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதன் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என உங்களுக்கு தெரியும். நீதிமன்ற தீர்ப்பு நல்லப்படியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் பணிகள் தொடங்கும். மகளிர் தங்கும் விடுதி உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மினி டைடல் பூங்காவுக்கு ஒரு வாரம், 10 நாட்களில் இடம் தேர்வு செய்யப்படும். அரசு நிலங்கள் கரூர் மாவட்டத்தில் மிக குறைவாக, உள்ளன. போதிய அளவு அரசு திட்டங்களுக்கு இடம் இல்லாமல் உள்ளது. அதை போக்கக்குடிய அளவில் புதிய இடங்களுக்கு இடம் தேர்வு செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x