Published : 21 Nov 2024 01:59 PM
Last Updated : 21 Nov 2024 01:59 PM
சென்னை: "ராமேஸ்வரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், வாழ்வாதாரமான மீன்பிடிப் படகுகளை பறிமுதல் செய்வதும், மாதக்கணக்கில் சிறையில் அடைப்பதும் தொடர் கதையாகவே உள்ளது. இலங்கை கடற்படையினரால் ஏற்படும் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மநீம மீனவர் அணியின் மாநில செயலாளர் ஆர்.பிரதீப் குமார் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகெங்கும் பல்வேறு இடங்களில் மீன்பிடி வளங்கள் நாசமாக்கப்பட்டு வருகின்றன. வெவ்வேறு பிரச்சினைகளுக்கு நடுவில் வாழ்க்கையே போர்க்களமாகத்தான் மீனவர்களின் வாழ்வு நீடிக்கிறது. பொருளாதாரச் சிரமங்கள் மட்டுமின்றி, அடிப்படை உரிமைகளை இழந்தும், பாதுகாப்பற்ற நிலையிலும் மீனவர்கள் அன்றாட வாழ்க்கையை நகர்த்தவே போராட வேண்டியிருக்கிறது.
சர்வதேச அளவில் கடல் மற்றும் நீர்நிலைகள் மாசடைந்து வருகின்றன. இதுகுறித்த விழிப்புணர்வு அனைத்துத் தரப்பினரிடமும் ஏற்படுவது அவசியம். மிகப் பெரிய கடற்கரைப் பகுதியைக் கொண்ட தமிழக மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஏற்படும் இன்னல்களுடன், அண்டை நாட்டு கடற்படையினராலும் சொல்லவொண்ணா துன்பத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
ராமேஸ்வரம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களை, இலங்கை கடற்படையினர் கைது செய்வதும், வாழ்வாதாரமான மீன்பிடிப் படகுகளை பறிமுதல் செய்வதும், மாதக்கணக்கில் சிறையில் அடைப்பதும் தொடர்கதையாகவே உள்ளது. இதெல்லாம் போதாதென்று, இப்போது லட்சக்கணக்கில் அபராதம் விதித்தும் மீனவர்களை பரிதவிக்கச் செய்கின்றனர்.
தமிழக மீனவர்களுக்கு இன்னல்கள் ஏற்படும்போதெல்லாம், மீனவர்களுக்கான முதல் ஆதரவுக் குரல் எழுப்புவது மக்கள் நீதி மய்யம்தான். இலங்கை கடற்படையினரால் ஏற்படும் தொல்லைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து போராடி வருகிறது.
தமிழக மீனவர்களின் கடல் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரம் மீட்டெடுக்கப்பட வேண்டும். கடல் வளங்களைப் பாதுகாப்பதுடன், மீனவர்களின் சமூக நலன்களை மேம்படுத்த வேண்டும். மக்களுக்கு சத்தான உணவு வழங்கும் மீனவர்களின் கடின உழைப்புக்கு அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். வாழ்க்கையே போர்க்களமான மீனவர்களின் கண்ணீரைத் துடைக்க மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.
ஒவ்வொரு நாளும் கடலிலும், கரையிலும் போராடிக் கொண்டிருக்கும் மீனவர்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும். மழை, புயல் என இயற்கைப் பேரிடர்களைக் கடந்து, பல்வேறு சிரமங்கள் மற்றும் நெருக்கடிகளுக்கிடையே மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள நெய்தல் நிலச் சொந்தங்களுக்கு மக்கள் நீதி மய்யம் உலக மீனவர் தின நல் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது,” என்று அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT