Last Updated : 21 Nov, 2024 12:55 PM

2  

Published : 21 Nov 2024 12:55 PM
Last Updated : 21 Nov 2024 12:55 PM

விசிக மீது நம்பிக்கை வரும்போது ஆட்சி அதிகாரத்தை மக்கள் கொடுப்பார்கள்: திருமாவளவன்

பழநி புலிப்பாணி ஆசிரமத்தில் விசிக தலைவர் திருமாவளவன் சுவாமி தரிசனம் செய்தார்.

பழநி: “விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது நம்பிக்கை வரும் போது மக்கள் ஆட்சி அதிகாரத்தை கொடுப்பார்கள்,” என்று பழநியில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கூறினார்.

திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்றிரவு (நவ.20) விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பழநிக்கு வந்தார். அவர் வியாழக்கிழமை (நவ.21) காலை வின்ச் ரயில் மூலம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தார். பின்னர், படிப்பாதை வழியாக மலை அடிவாரத்துக்கு வந்த அவர் புலிப்பாணி ஆசிரமத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “பழநி தேவஸ்தானத்துக்கு உட்பட்ட மெட்ரிக் பள்ளியில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இதேபோல், தமிழகம் முழுவதும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களையும், கோயில் பணியாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

நீதிமன்ற உத்தரவால் பழநி அடிவார சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதித்துள்ளது. அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தொழில் செய்திட அரசு உரிய வழிகாட்டுதல்களை ஏற்படுத்த வேண்டும். ஆட்சி அதிகாரம் மக்கள் கொடுக்கும் தீர்ப்பு. விடுதலை சிறுத்தைகள் கட்சி மீது நம்பிக்கை வரும் போது மக்கள் ஆட்சி அதிகாரத்தை கொடுப்பார்கள்,” என்று கூறினார்.

தொல்.திருமாவளவன் தங்கியிருந்த விடுதி அறையில் இருந்து வெளியே வரும் போது அவரை பார்க்கவும், அவருடன் புகைப்படம் எடுக்கவும் ஒரே நேரத்தில் ஏராளமானோர் செல்ல முயன்றனர். இதனால் அவர்களுக்குள் தள்ளு முள்ளு ஏற்பட்டது. அவர்களை நிர்வாகிகளால் கட்டுப்படுத்த முடியாததால் திருமாவளவன் களத்தில் இறங்கி தொண்டர்களை விலகி செல்லுமாறு கண்டிப்புடன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x