Published : 21 Nov 2024 12:50 PM
Last Updated : 21 Nov 2024 12:50 PM

கள்ளக்குறிச்சி விவகாரம் | திமுகவின் நடவடிக்கை மீது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது: ஓபிஎஸ்

ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப்படம்

சென்னை: கள்ளக்குறிச்சியில், கள்ளச் சாராய உயிரிழப்புகள் வழக்கின் தீர்ப்பின் மூலம் திறமையற்ற ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பதும், இதுதான் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீரழிவுக்குக் காரணம் என்பதும் தெளிவாகி உள்ளது என்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கள்ளக்குறிச்சியில், கள்ளச் சாராயம் அருந்தி 67 பேர் உயிரிழந்த வழக்கினை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற அமர்வு, கள்ளச் சாராயம் தயாரிப்பவர், விற்பனையாளர் மற்றும் காவல் துறையினருக்கு மத்தியில் தொடர்பு இருப்பதாகவும், சிபிசிஐடி, நியாயமான, பாரபட்சமற்ற விசாரணையை மேற்கொள்ளாது என்றும் தெரிவித்து, இந்த வழக்கினை மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. இந்தத் தீர்ப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. இந்தத் தீர்ப்பின் மூலம் திறமையற்ற ஆட்சி தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது என்பதும், இதுதான் தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு சீரழிவுக்குக் காரணம் என்பதும் தெளிவாகி உள்ளது.

இந்தத் தீர்ப்பு குறித்து பேட்டி அளித்துள்ள சட்டத் துறை அமைச்சர், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யும்போது முறையான வாதங்களை எடுத்துரைத்து தடுத்து நிறுத்துவோம் என்றும், மேல் முறையீட்டுக்கு எப்போது செல்வது என்பதை முதல்வர் முடிவு செய்வார் என்றும் கூறி இருப்பது திமுகவின் நடவடிக்கை மீது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்று உண்மையிலேயே திமுகவுக்கு அக்கறை இருக்குமானால், சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பினை ஏற்று, மேற்படி வழக்கினை மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இதைச் செய்யாமல், சட்ட வல்லுநர்களுடன் கலந்து பேசி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது குறித்து முதல்வர் முடிவெடுத்து விரைவில் அறிவிப்பார் என்று சொல்வது குற்றவாளிகளுக்கு உதவி புரிவது போல் உள்ளது. இது கடும் கண்டனத்துக்குரியது.

இது மட்டுமல்லாமல், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு வழக்கு மத்திய புலனாய்வுத் துறைக்கு மாற்றப்பட்டால், காலதாமதம் ஏற்படும் என்று சட்ட அமைச்சர் தெரிவித்துள்ளார். ஏதோ, சிபிசிஐடி காலதாமதமின்றி அனைத்து வழக்குகளையும் விசாரிப்பது போல அமைச்சரின் கூற்று உள்ளது. கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு 90 நாட்களில் முடிக்கப்படும் என்று முதல்வர் கூறினார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 1,276 நாட்கள் கடந்தும் வழக்கு முடிக்கப்படவில்லை. திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் உயிரிழப்பு குறித்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் கடந்த நிலையிலும், எவ்விதமான முன்னேற்றமும் ஏற்படவில்லை. வேங்கைவயல் வழக்கு சிபிசிஐடியிடம் ஒப்படைக்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், எவ்வித முன்னேற்றமும் காணப்படவில்லை. இதுபோன்று பல வழக்குகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. எனவே, சிபிசிஐடி வசம் இருந்தால் வழக்குகள் விரைந்து முடிக்கப்படும் என்ற அமைச்சரின் கூற்றில் எள்ளளவும் உண்மையில்லை.

எனவே, சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பினை ஏற்று, 67 உயிரிழப்புகளை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கினை உடனடியாக மத்திய புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்கவும், புலன் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு நல்கவும் முதல்வர் உத்தரவிட வேண்டுமென்று அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x