Published : 21 Nov 2024 11:59 AM
Last Updated : 21 Nov 2024 11:59 AM
அத்தை கனிமொழியுடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் என்னதான் விட்டுக் கொடுத்துப் போனாலும் இவர்கள் இருவரையும் முன்னிறுத்தி அவ்வப்போது எழும் அரசியல் சர்ச்சைகள் மட்டும் ஓய்ந்தபாடில்லை. அந்த வகையில், உதயநிதியின் தூத்துக்குடி மாவட்ட ஆய்வுக் கூட்டம் புதிய புயலைக் கிளப்பி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கடந்த 14-ம் தேதி அரசு திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்ற இக்கூட்டத்தில், மாவட்ட அமைச்சர்களான பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் மற்றும் ஆளும் கூட்டணி எம்எல்ஏ-க்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ஆனால், இந்த ஆய்வுக் கூட்டத்தில் தூத்துக்குடி எம்பி-யான கனிமொழி பங்கேற்கவில்லை. இது அதிகாரிகள் மற்றும் கட்சியினர் மத்தியில் சில ஊகங்களை எழுப்பியது. ஆய்வுக் கூட்டம் முடிந்து வெளியே வந்த உதயநிதி ஸ்டாலினிடம், கூட்டத்தில் கனிமொழி எம்.பி பங்கேற்காதது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “அவரிடம் சொல்லிவிட்டு தான் நான் வந்தேன்.
அவர் ஒரு அவசர வேலையாக வெளிநாடு சென்றுள்ளார். அடுத்த 10 அல்லது 15 நாளில் திரும்பி வந்துவிடுவேன் என கூறியுள்ளார். அதன் பிறகு இருவரும் சேர்ந்து ஒன்றாக நிகழ்ச்சியில் கலந்து கொள்வோம்” என்றார் உதயநிதி. ஆனால், அதற்கு பின்பு நடந்த நிகழ்வு தான் தூத்துக்குடி திமுகவில் புயலை கிளப்பியுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் முடிந்ததும், மாலை 5 மணியளவில் தூத்துக்குடி குறிஞ்சிநகர் பகுதியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக பவளவிழா ஏற்பாடாகி இருந்தது.
உதயநிதி ஸ்டாலின் இதில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குவார் என்றும், அதனை முடித்துக் கொண்டு கார் மூலம் மதுரை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை திரும்புவார் என்றும் முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஆய்வுக் கூட்டம் முடிந்ததும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்காமல் உதயநிதி ஸ்டாலின் அவசர, அவசரமாக தூத்துக்குடியிலிருந்து விமானம் மூலம் சென்னை திரும்பிவிட்டார்.
வடக்கு மாவட்ட திமுக சார்பில் 405 தையல் இயந்திரம், 150 கிரிக்கெட் அணிகளுக்கு உபகரணங்கள் என ரூ.50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்க மிக பிரம்மாண்டமான முறையில் அமைச்சர் கீதாஜீவன் ஏற்பாடுகளை செய்திருந்தார். ஆனால், உதயநிதி ஸ்டாலின் வராததால் தையல் இயந்திரங்களை மட்டும் பயனாளிகளுக்கு அமைச்சர் கீதாஜீவனே வழங்கினார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரிலேயே நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்காமல் உதயநிதி ஸ்டாலின் அவசரமாக சென்னை திரும்பியதாக கூறப்படுகிறது. கனிமொழி இல்லாத நேரத்தில் கட்சி சார்பில் இத்தகைய பிரம்மாண்ட நிகழ்ச்சி வேண்டாம். அவர் வந்த பிறகு இன்னொரு நாளில் நிகழ்ச்சியை மீண்டும் நடத்தலாம் என முதல்வர் உதயநிதிக்கு அறிவுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் சொன்னது போல இருவரும் பங்கேற்கும் வகையில் ஒரு விழா மீண்டும் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம், கனிமொழி இல்லாமல் ஆய்வுக் கூட்டம் நடத்தியது, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை உதயநிதி ஸ்டாலின் ரத்து செய்தது போன்றவற்றில் உள் விவகாரம் ஏதோ இருப்பதாக திமுகவினரே கிசுகிசுக்கின்றனர். கனிமொழி மீண்டும் தூத்துக்குடிக்கு வந்தால்தான் இந்தப் பிரச்சினைக்கு ஒரு முற்றுப்புள்ளி விழும்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT