Published : 21 Nov 2024 06:30 AM
Last Updated : 21 Nov 2024 06:30 AM
சென்னை: அரும்பாக்கம் ஜானகிராமன் காலனியில் குடியிருப்பு கட்டிடத்தை ஒட்டி சாலையில் பாலவிநாயகர் கோயில் நிறுவப்பட்டுள்ளது. இக்கோயில் அருகில் உள்ள வீடு ஒன்றில் விலங்குகள் நல ஆர்வலர், நாய்களுக்கு உணவளித்து வந்துள்ளார். இந்த நாய்கள், அசைவ உணவை உண்டுவிட்டு, எலும்புகளை விநாயகர் கோயிலில் போட்டு அசுத்தம் செய்வதாக புகார் எழுந்தது.
எனவே, நாய்களுக்கு இப்பகுதியில் உணவளிப்பதை தவிர்க்குமாறு பக்தர்கள் சார்பில் விலங்குகள் நல ஆர்வலரிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விநாயகர் கோயில் சாலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாகவும், அதை அகற்ற கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் விலங்குகள் நல ஆர்வலரின் உறவினர் கடந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் மாநகராட்சி நிர்வாகம், பக்தர்களுடன் கலந்து பேசி தீர்வு காணுமாறு அறிவுறுத்தி வழக்கை முடித்து வைத்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆக்கிரமிப்பில் உள்ள கோயிலை மாநகராட்சி இன்னும் அகற்றவில்லை என நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதில் வட்டாட்சியர் நேரில் ஆய்வு செய்து, மாநகராட்சி சாலையை ஆக்கிரமித்து கோயில் கட்டப்பட்டதாக அறிக்கை அளித்துள்ளார்.
அதன் அடிப்படையில் கோயிலை, பக்தர்களே அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் மாநகராட்சி அகற்ற வேண்டும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அதன்படி, கோயிலை அகற்ற பக்தர்களுக்கு கொடுத்த அவகாசம் முடிந்த நிலையில், காவல்துறை பாதுகாப்புடன் சென்று, மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் கோயிலை அகற்ற முயன்றனர். அதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில் பக்தர்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, கோயிலை அகற்ற இடைக்கால தடை பெறப்பட்டது.
இதுதொடர்பாக பக்தர்கள் கூறியதாவது: இந்த கோயில் தொடர்பாக சென்னை மாநகர சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு குறித்து, அவமதிப்பு வழக்கில் தெரிவிக்கவில்லை. இந்த கோயில் ஆக்கிரமிப்பாக இருந்தாலும், மக்களின் மதநம்பிக்கை சார்ந்தது. 40 ஆண்டு களாக மக்கள் வழிபட்டு வருகின்றனர்.
அதனால் கோயிலை அகற்றாமல் இருக்க, அரசு சார்பில் சரியான வாதங்களை வைத்து, எங்கள் மத நம்பிக்கையைப் பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, “தற்போது இந்த கோயில் தொடர்பாக 2 வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. அவற்றின் தீர்ப்பு அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT