Published : 21 Nov 2024 04:08 AM
Last Updated : 21 Nov 2024 04:08 AM

கூடைப்பந்து வீராங்கனை எலினா இறப்புக்கு சிக்கன் ரைஸ் காரணமில்லை: பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல்

கூடைப்பந்து வீராங்கனை எலினா இறப்புக்கு சிக்கன் ரைஸ் சாப்பிட்டது காரணமில்லை என கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை டீன் தெரிவித்துள்ளார்.

கோயம்புத்தூர் சுகுணாபுரம் பகுதியைச் சேர்ந்த ராபின் டென்னிஸ் என்பவரின் மகள் எலினா லாரெட் (15). அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கூடைப்பந்து வீராங்கனையாகவும் இருந்து வந்தார். மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டியில் பங்கேற்கச் சென்ற அவர், ரயிலில் சென்னை திரும்பிக் கொண்டிருக்கும்போது வயிற்று வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, 17-ம் தேதி காலை 7 மணியளவில் சென்னைக்கு வந்திறங்கியவுடன், அவரது உறவினர் உடனடியாக எலினாவை அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். பின்னர் சிகிச்சை முடிந்து, சென்னை பெரவள்ளூர் அகரம் பகுதியில் வசிக்கும் மற்றொரு உறவினர் வீட்டில் எலினா தங்கினார். ஆனால், சில மணி நேரத்தில் மீண்டும் எலினாவுக்கு வயிற்றுவலி, வாந்தி மயக்கம் அதிகமானதால் பதற்றம் அடைந்த உறவினர்கள் அவரை ஆம்புலன்ஸ் மூலம் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு எலினாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். பின்னர் மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின்பேரில் பெரவள்ளூர் போலீஸார், எலினா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்து பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டதை அடுத்து அவரது உடல் சொந்த ஊரான கோவைக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி சடங்கு நடைபெற்றது.

இதற்கிடையே, ரயிலில் வரும்போது எலினா சிக்கன் ரைஸ், பர்கர் போன்றவற்றை சாப்பிட்டதாலேயே அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இது பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்நிலையில், அவரது மரணத்துக்கு சிக்கன் ரைஸ் மற்றும் அவர் உண்ட உணவுகள் காரணமில்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் லியோ டேவிட் கூறும்போது, “கூடைப்பந்து வீராங்கனை எலினா இறப்புக்கு அவரது உடலில் இருந்த பல்வேறு பிரச்சினைகளே காரணம்” என்றார். எலினா எகிறி குதித்து விளையாடுவதால், வயிற்றின் இடது பக்கத்தில் இருந்த டயாபார்ம் என்ற மெல்லிய தசைப்பகுதி கிழிந்து மேல் நோக்கி சென்று குடல், கல்லீரல், இதயத்தை இறுக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. அதேபோல் உடலில் வேறு சில பிரச்சினைகள் இருந்தன. அதுதான் அவரது இறப்புக்கு காரணம் என்பது பிரேதப் பரிசோதனையில் தெரியவந்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x