Published : 11 Jun 2018 09:39 AM
Last Updated : 11 Jun 2018 09:39 AM

110 ஆண்டுகளை நிறைவு செய்யும் எழும்பூர் ரயில் நிலையம்: மறுவளர்ச்சி திட்டத்தில் மேம்படுத்த ரயில்வே துறை இலக்கு

110 ஆண்டுகளை இன்றுடன் நிறைவு செய்துள்ள எழும்பூர் ரயில் நிலையத்தை, மறுவளர்ச்சி திட்டத்தில் மேம்படுத்த மத்திய ரயில்வே துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

சென்னையின் முக்கிய அடையாளமான எழும்பூர் ரயில் நிலையம் முகலாய மற்றும் கோதிக் எனும் கட்டிடக் கலைகளை கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த வரலாற்று சிறப்புமிக்க கட்டிடத்தை கட்டியவர் சாமிநாதப் பிள்ளை. ஹென்றி இர்வின் என்ற ஆங்கிலேயர் கட்டிடத்தை வடிவமைத்தார்.

17 லட்சம் ரூபாய் செலவில்..

1905-ம் ஆண்டு இந்த ரயில் நிலையத்துக்கான கட்டமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டு, 1908-ம் ஆண்டில் பணிகள் நிறைவடைந்தன. 1908-ம் ஆண்டு ஜூன் 11-ம் தேதி பயணிகளின் வசதிக்காக தொடங்கப்பட்டது. மொத்தமாக 2.5 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் நிலையத்தில், வழக்கமான ஸ்டேஷன் மாஸ்டர் அறை, அலுவலர்களின் அறைகளைத் தாண்டி நீண்ட, காற்றோட்டம் மிக்க காத்திருக்கும் அறைகள், சிற்றுண்டி விடுதி, பயணிகளின் உடமைகளை வைக்கும் அறை என எழும்பூர் ரயில் நிலையம் சிறப்பான வசதிகளுடன் கட்டப்பட்டது. இதற்கு அப்போதே 17 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவாகியுள்ளது. இந்த ரயில் நிலையம் அந்த காலத்தில் சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் இருந்துள்ளது.

எழும்பூரில் இருந்து இலங்கையின் கொழும்பு நகருக்கும் ரயில்கள் இயக்கப்பட்டிருக்கின்றன. கொழும்பு செல்லும் பயணிகளை ஏற்றிச் செல்லும் எழும்பூர் – தனுஷ்கோடி போட் மெயில், அவர்களை தனுஷ்கோடியில் இறக்கிவிட்டு விடும். பின்னர் அவர்கள் அங்கிருந்து படகு மூலம் இலங்கைக்கு அழைத்துச் செல்லப்படுவார்களாம். 1964-ம் ஆண்டு வீசிய புயலில் தனுஷ்கோடி இருப்புப் பாதை முற்றிலுமாக அழிந்துபோனதால், அத்துடன் இந்த ரயில் சேவை நிறுத்தப்பட்டது.

இப்படி நிறைய வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சியாய் விளங்கிய எழும்பூர் ரயில் நிலையம், இன்று ஒரு வரலாற்று பெட்டகமாய் நின்று கொண்டிருக்கிறது. எழும்பூர் ரயில் நிலையம் இன்றுடன் 110-வது ஆண்டை நிறைவு செய்துள்ளது.

இதுதொடர்பாக ரயில் பயணிகளிடம் கருத்து கேட்டபோது, ‘‘எழும்பூர் ரயில் நிலையம் இருபுறமும் உள்ள முக்கிய சாலைகளின் நடுவில் அமைந்துள்ளதால், மக்கள் இரு புறமும் எளிமையாக வந்து செல்ல முடிகிறது. அருகிலேயே மெட்ரோ ரயில் நிலையமும் தற்போது இணைக்கப்பட்டுள்ளது முக்கியமான நிகழ்வாகும்.

காலத்துக்கு ஏற்றவாறு வசதிகள்

விமான நிலையம், கோயம்பேடு, சென்ட்ரல் போன்ற இடங்களுக்கு எளிமையாகவும், விரைவாகவும் செல்ல முடிகிறது. காலத்துக்கு ஏற்றவாறு புதிய வசதிகளை ரயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்து வருகிறது.

இருப்பினும், பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருவதால், விரிவாக்கப் பணிகளை அதிகரிக்க வேண்டும்’’ என்றனர்.

இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் சிலரிடம் கேட்டபோது, ‘‘தெற்கு ரயில்வேயில் மிகவும் பழமையான பாரம்பரிய ரயில் நிலையங்களில் சென்னை எழும்பூர் ரயில் நிலையம் முக்கியமானதாக இருக்கிறது. மொத்தமுள்ள 11 நடைமேடைகளில் இருந்து ரயில்கள் இயக்கப்படுகின்றன. 35-க்கும் மேற்பட்ட விரைவு ரயில்களிலும், 118-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்களிலும் பயணிகளுக்கு சேவை அளிக்கப்படுகிறது.

பயணிகள் தேவை அதிகரிப்பு

தினமும் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். காலம் மாற, மாற பயணிகளின் தேவையும் அதிகரித்து வருகிறது. பொதுமக்களின் வசதிக்காக 3, 4, 5, 6-வது நடைமேடைகளில் தலா ஒரு எஸ்கலேட்டர் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கிடையே, 7, 8, 9-வது நடைமேடையின் பகுதியில் ஒரு எஸ்கலேட்டரும் அமைக்கப்பட உள்ளது.

நாடுமுழுவதும் 40 முக்கிய ரயில் நிலையங்களை மறுவளர்ச்சி திட்டத்தின் மேம்படுத்தும் பட்டியலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையமும் இடம்பெற்றுள்ளது. அதன்படி, இங்குள்ள பாரம்பரிய கட்டிடப் பகுதிகளில் எந்த பணியும் மேற்கொள்ளாமல், காலியாகவுள்ள பகுதிகளில் பயணிகளுக்கான வசதிகள் மேம் படுத்தப்படுகின்றன.

குடிநீர் மறுசுழற்சி, சோலார் மின்உற்பத்தி, கழிவுநீர் மேம்பாட்டு மையம், மழைநீர் சேமிப்பு, பயணிகளுக்கான ஓய்வு அறைகள், பிரமாண்டமாக வாகனங்கள் நிறுத்தும் இடவசதிகள் இதில் இடம் பெறும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x