Published : 21 Nov 2024 12:31 AM
Last Updated : 21 Nov 2024 12:31 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவனை பணியிடை நீக்கம் செய்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மொழியியல் உயர்படிப்பு மையத்தின் பேராசிரியராகப் பணியாற்றி வந்த வி.திருவள்ளுவன், தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக 2021 டிசம்பர் 13-ம் தேதி பொறுப்பேற்றார். இவரது பதவிக் காலம் வரும் டிசம்பர் 12-ம் தேதியுடன் நிறைவடைய இருந்தது.
ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு: இந்நிலையில், துணைவேந்தர் திருவள்ளுவனை பணியிடை நீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை, விசாரணையை முன்னிறுத்தி பணியிடை நீக்கம் செய்வதாக தமிழக ஆளுநரின் செயலாளர் கிர்லோஸ்குமார் உத்தரவிட்டு, அதற்கான உத்தரவு நகலை அனுப்பியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் காந்தி கிராமம் கிராமியப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றிருந்த துணைவேந்தர் திருவள்ளுவனிடம் அதற்கான நகல் வழங்கப்பட்டது. இதையடுத்து, அவர் அங்கிருந்து புறப்பட்டு தஞ்சாவூர் வந்து, தனது குடியிருப்பில் இருந்த பொருட்களை எடுத்துக் கொண்டு, சொந்த ஊரான விழுப்புரம் மாவட்டத்துக்குச் சென்றார்.
அவர் எதற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்ற முழு விவரம் தெரியவில்லை. கடந்தமாதம் 19-ம் தேதி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற14-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். துணைவேந்தர் பதவிக்காலம் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT