Published : 20 Nov 2024 07:32 PM
Last Updated : 20 Nov 2024 07:32 PM
நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் விடிய விடிய சாரல் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. கன்னியாகுமரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த ஒரு மாதமாக விட்டு விட்டு பெய்து வரும் மழையால் மாவட்டம் முழுவதும் குளிரான தட்பவெப்பம் நிலவி வருகிறது. இன்று அதிகபட்சமாக மயிலாடியில் 53 மிமீ., மழை பதிவானது. கொட்டாரம், அடையாமடை, மாம்பழத்துறையாறில் தலா 38 மிமீ., ஆனைகிடங்கில் 37, சுருளோட்டில் 36, நாகர்கோவிலில் 35, குருந்தன்கோட்டில் 34, தக்கலை, சிற்றாறு ஒன்றில் 25, பேச்சிப்பாறையில் 24, பாலமோர், பெருஞ்சாணியில் தலா 23 மழை பெய்திருந்தது.
நேற்று இரவில் துவங்கிய சாரல் மழை இன்றும் விடிய விடிய பெய்தது. மழை பகல் முழுவதும் விட்டு விட்டு பெய்தாலும் வெயில் இன்றி குளிரான தட்பவெப்பம் நிலவியது. கனமழை இல்லாததால் மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கவில்லை. அதே நேரம் பேச்சிப்பாறை, மற்றும் மலைகிராம பகுதிகளை உள்ளடக்கிய திருவட்டாறு கல்வி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்பட்டது.
மழையால் ரப்பர் பால்வெட்டும் தொழில், தென்னை சார்ந்த தொழில், மீன்பிடி தொழில், மற்றும் கட்டுமான தொழில்கள் பாதிக்கப்பட்டன. சிற்றாறு ஒன்றின் நீர்மட்டம் 14.76 அடியாக இருந்தது. அணைக்கு 150 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வரும் நிலையில் அதே அளவு தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பேச்சிப்பாறை நீர்மட்டம் 42.25 அடியாக உள்ள நிலையில் அணைக்கு உள்வரத்தாக 535 கனஅடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து 501 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.
பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 64.51 அடியாக உள்ள நிலையில் அணைக்கு 364 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 510 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி எம்ஜிஆர் நகர் பகுதியில் ஆலமரம் சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதைப்போல் பேச்சிப்பாறை, சிற்றாறு, களியல் பகுதிகளிலும் பல இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT