Published : 20 Nov 2024 05:41 PM
Last Updated : 20 Nov 2024 05:41 PM
மும்பை: வளர்ச்சி பணிகளுக்கு மக்கள் வாக்களிப்பர் என்பதால், மகாயுதி கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சட்டப் பேரவை தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை தொடங்கியது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தானேவில் உள்ள கோப்ரி - பச்பகாடி தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். இத்தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார். தனது வாக்கை பதிவு செய்தபின் ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில், “வலுவான மகாராஷ்டிராவை உருவாக்க இந்த ஜனநாயக திருவிழா நமக்கு கிடைத்த வாய்ப்பு.
ஒவ்வொரு குடிமகனும், வாக்களிக்கும் கடமையை நிறைவேற்ற வேண்டும். நமது ஜனநாயகம் செழித்திட அனைவரும் வாக்களிக்க வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். அதிகளவிலான வாக்குப்பதிவை நாம் உறுதி செய்ய வேண்டும். மகா விகாஸ் அகாடி கூட்டணியின் இரண்டரை ஆண்டு கால ஆட்சியையும், மகாயுதி கூட்டணியின் இரண்டரை ஆண்டு கால ஆட்சியையும் மக்கள் பார்த்துள்ளனர். நாங்கள் செய்த பணிகளுக்காகவும், வளர்ச்சிக்காவும் மக்கள் வாக்களிப்பர்.
ஸ்தம்பித்து கிடந்த வளர்ச்சி பணிகளை எல்லாம் நாங்கள் மீண்டும் தொடங்கினோம். கடந்த 5 ஆண்டுகளில், எங்களின் வளர்ச்சி பாதையை மக்கள் பார்த்துள்ளனர். மாநிலத்தின் வளர்ச்சிக்காக உண்மையாக பணியாற்றியது யார் என மக்கள் அறிவர். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு எனது அரசு அமல்படுத்திய நலத்திட்டங்களை மக்கள் அறிவர். மகாயுதி கூட்டணி அரசு அதிக பெரும்பான்மையுடன் மகத்தான வெற்றி பெறும்” என்று முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT