Published : 20 Nov 2024 04:06 PM
Last Updated : 20 Nov 2024 04:06 PM
சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கை சிபிஐ விசாரிக்க தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், "திமுக ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டால், கள்ளக்குறிச்சியில் 68 உயிர்கள் கள்ளச் சாராயத்துக்கு பலியான வழக்கு தொடர்பாக, தமிழக பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்த வழக்கில், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம், வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது.
திமுக அரசின் காவல் துறைக்குத் தெரியாமல் கள்ளச் சாராய விற்பனை நடந்திருக்க வாய்ப்பில்லை எனவும், மாவட்ட காவல் துறை, கள்ளச் சாராய விற்பனையைக் கண்டுகொள்ளாமல் இருந்ததால்தான், இந்தத் துயர சம்பவம் நிகழ்ந்திருப்பதாகவும், கள்ளச் சாராயம் தொடர்பாக, திமுக அரசுக்கு இது ஓர் எச்சரிக்கை மணி என்றும் மாண்புமிகு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. கள்ளச் சாராய விற்பனையையும் கண்டு கொள்ளாமல், வழக்கு விசாரணையையும் மெத்தனப் பொக்கில் கையாண்டு, உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்றும் போக்கில் திமுக அரசு செயல்பட்டு வந்திருப்பது, மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்துகள் மூலம் தெளிவாகத் தெரிகிறது.
திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்துக்குக் கொட்டு வைத்திருக்கும் மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றத்துக்கு, நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். 68 உயிர்கள் பலியானதை மூடி மறைத்து, வழக்கைத் திசைதிருப்ப முயன்ற திமுக அரசுக்கு வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேல்முறையீடு என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்காமல், கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய மரணங்கள் தொடர்பான வழக்கை, சிபிஐ விசாரிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம்" என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT