Published : 20 Nov 2024 01:56 PM
Last Updated : 20 Nov 2024 01:56 PM

அரிட்டாபட்டியில் கனிம வளத்தை எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு அனுமதி வழங்க கூடாது: ஜவாஹிருல்லா

சென்னை: மதுரை அரிட்டாபட்டியில் வேதாந்தா நிறுவனத்திற்கு கனிம வளத்தை தாரை வார்க்கும் முயற்சியை நிறுத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ''மதுரைக்கு அருகில் மேலூரை ஒட்டி உள்ள அரிட்டாப்பட்டி எனும் இயற்கை எழில் கொஞ்சும் கிராமம் உள்ளது. களிஞ்ச மலை, நாட்டார் மலை, ஆப்டான் மலை, ராமாயி மலை, கழுகு மலை, தேன்கூடு மலை, கூகை கத்தி மலை என ஏழு மலைகள் அரிட்டாப்பட்டியில் உள்ளன. இந்த ஊரைச் சுற்றி கண்மாய்கள், நீரோடைகள், குளங்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட நீராதாரங்கள் உள்ளன. இயற்கையின் எழில் பூத்துக் குலுங்கும் இந்த ஊரில் அரிய பறவை இனங்கள் வந்து செல்கின்றன.

இத்தகைய இயற்கை எழில் மிகுந்த அரிட்டாப்பட்டி பகுதியில் வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் 2015.51 ஹெக்டேர் பகுதியை டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக ஏலத்தில் எடுத்திருப்பதாகத் தகவல்கள் வருகின்றன. 15 தமிழர்களின் இரத்தம் படிந்த கைகளுடைய வேதாந்தா நிறுவனம் எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் வருவதற்குத் தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாட்டின் முதல் பல்லுயிர் பாரம்பரியத் தளமாக அறிவிக்கப்பட்ட அரிட்டாபட்டி யின் கனிம வளங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதே தமிழ்நாட்டுச் சூழலியலாளர்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

இந்தப் பகுதியின் முக்கியத்துவம் கருதி ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு ஒன்றிய சுரங்கங்கள் அமைச்சகம் வழங்கிய உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு இந்தத் திட்டத்திற்கு எந்தவித அனுமதியும் இசைவாணையும் வழங்கக் கூடாது எனவும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். சூழல் முக்கியத்துவம் மற்றும் தமிழர் வரலாற்றைச் சுமந்து நிற்கும் அரிட்டாபட்டியை அழிக்க நினைக்கும் ஒன்றிய அரசின் முயற்சியைத் தடுக்க உரிய நடவடிக்கைகளை உடனடியாகத் தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.'' இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x