Last Updated : 20 Nov, 2024 11:14 AM

1  

Published : 20 Nov 2024 11:14 AM
Last Updated : 20 Nov 2024 11:14 AM

இமானுவேல் சேகரனுக்கு மக்கள் பணத்தில் மணிமண்டபமா? - எதிர்ப்பும் ஆதரவும்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையும் பரமக்குடியில் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சியும் அரசியல் கட்சிகளால் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளாக மாற்றப்பட்டுவிட்டன. ஏற்கெனவே தேவர் குருபூஜையானது அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல் இமானுவேல் சேகரன் பிறந்த நாளையும் அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்தாண்டு செப்.11-ல் இமானுவேல் சேகரன் நினைவு நாளில், ரூ.3 கோடியில் பரமக்குடியில் அவருக்கு சிலையுடன் கூடிய மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். இதற்காக பரமக்குடி சந்தைப்பேட்டை பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டு மணிமண்டபம் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

இதனிடையே, அக்டோபர் 9-ம் தேதி இமானுவேல் சேகரனின் நூறாவது பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்தார் முதல்வர். அதன்படி, அக்டோபர் 9-ம் தேதி பரமக்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் இமானுவேல் சேகரன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது.

இந்நிலையில், ‘இமானுவேல் சேகரன் சுதந்திர போராட்ட வீரர் அல்ல. எனவே அவருக்கு மக்கள் பணத்தில் மணி மண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’ என்று முதுகுளத்தூரைச் சேர்ந்த ஆப்பநாடு மறவர் சங்க செயலாளர் குணசேகரன், ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய ஆப்பநாடு மறவர் சங்க நிர்வாகிகள், “இமானுவேல் சேகரன் இந்திய ராணுவத்தில் பணியாற்றியதற்கான ஆதாரங்களோ சுதந்திர போராட்ட வீரர் என்பதற்கான ஆதாரங்களோ இல்லை. இந்திரா காந்தி ஆட்சியில் மத்திய அரசு ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் 1,622 பேர் கொண்ட பட்டியலை சுதந்திர போராட்ட தியாகிகள் என அரசிதழில் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் இமானுவேல் சேகரன் பெயர் இல்லை.

தேவேந்திர குல சமுதாயத்தை நாங்கள் எதிரியாக கருதவில்லை. வாரச்சந்தை பகுதியில் மணிமண்டபம் கட்டுவதைத்தான் எதிர்க்கிறோம். இங்கு மணிமண்டபம் கட்டுவதால் வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படும். தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தில் போற்றப்பட வேண்டிய பல தலைவர்கள் உள்ளனர். அவர்களை விடுத்து சுதந்திர போராட்ட வீரர் அல்லாத ஒருவரை முன்னிலைப்படுத்தி அரசு பணத்தை வீணடிப்பதை எதிர்க்கிறோம். திமுக அரசு ஓட்டுக்காக இப்படிச் செயல்படுகிறது” என்றனர்.

சக்கரவர்த்தி

இமானுவேல் சேகரனின் மகள் வயிற்றுப் பேரனான சக்கரவர்த்தியோ, “எங்களது தாத்தா இமானுவேல் சேகரன் இந்திய ராணுவத்தில் பணியாற்றியபோது, எங்களது சின்ன தாத்தாவிற்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று அதற்காக 3 மாதம் சிறையில் இருந்துள்ளார். அதனால் தான் மத்திய அரசு சுதந்திர போராட்ட வீரர் என அறிவித்து கடந்த 2010-ல் அஞ்சல் தலை வெளியிட்டது.

அதேபோல் ஆளுநர் மாளிகையிலிருந்து ஆண்டுதோறும் சுதந்திர தினம், குடியரசு தின விழாக்களில் பங்கேற்குமாறு சுதந்திர போராட்ட வீரர்களின் குடும்பத்தினருக்கு அனுப்பப்படும் கடிதம் எங்களுக்கும் அனுப்பப்படுகிறது. தமிழக அரசு எங்கள் தாத்தாவுக்கு மணி மண்டபம் கட்டவும் அரசு விழா கொண்டாடவும் அறிவித்து சரியாக கடமையைச் செய்துள்ளது.

தாத்தாவின் நினைவிடம் அருகிலேயே மணிமண்டபம் இருந்தால் தான் நல்லது எனச் சொல்லி அதிகாரிகள் சந்தைப்பேட்டை இடத்தை எங்களது ஒப்புதலோடு தேர்வு செய்தனர். இதில் யாருக்கும் எந்த இடைஞ்சலும் வராது என்று தெரிந்தும் விளம்பரத்துக்காக வழக்கு தொடுத்துள்ளனர்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x