Published : 20 Nov 2024 11:13 AM
Last Updated : 20 Nov 2024 11:13 AM
கன்னியாகுமரியில் ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்தார் என்பதால் தளவாய் சுந்தரத்தை அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் குமரி கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் பொறுப்பிலிருந்தும் அக்டோபர் 8-ம் தேதி அதிரடியாய் தூக்கினார் பழனிசாமி.
பாஜகவுடன் அதிமுக அனுசரணையாக இல்லை என்பதைக் காட்டுவதற்காக இந்தத் தடாலடி நடவடிக்கையை எடுத்தார். இந்த நிலையில், பறிக்கப்பட்ட பதவிகளை மீண்டும் இப்போது தளவாய்க்கு அளித்திருப்பதன் மூலம் பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்திருக்கிறார் பழனிசாமி.
திமுகவும் பாஜகவுக்கும் தான் தங்களது அரசியல் எதிரிகள் என தெளிவான பாதையில் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி இருக்கும் நடிகர் விஜய், மறந்தும் அதிமுகவை விமர்ச்சிக்கவில்லை. இதைவைத்து, அவர் அதிமுகவுடன் கூட்டணிக்கு வரலாம் என்ற பேச்சுகள் படபடத்தன. அதிமுகவுக்கும் அந்த நப்பாசை இருந்தது. ஆனால், ‘அதற்கெல்லாம் வேலை இல்லை... அதிமுகவுடன் கூட்டணி என்பது வதந்தி’ என தெளிவுபடுத்திவிட்டது தவெக.
இது தொடர்பான அறிக்கை வெளியான அதே தினத்தில் தளவாய்க்கு மீண்டும் பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பதுதான் பலரது வாய்க்கும் இப்போது அவலாகி இருக்கிறது. முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ மீது பாஜக ஆதரவாளர் என்ற முத்திரை எப்போதும் உண்டு.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை அவர் அடிக்கடி சந்தித்துப் பேசுவதாகவும் அவரது அரசியல் எதிரிகள் சொல்வார்கள். கடந்த மக்களவைத் தேர்தலில் குமரி தொகுதியில் அதிமுக வாக்குகளை தளவாய் ஆதரவாளர்கள் பாஜகவுக்கு திருப்பிவிட்டதாகவும் அதனால் தான் அதிமுக காப்புத் தொகையை காவுகொடுத்ததாகவும் சிலர் செய்தி பரப்பினார்கள்.
இப்படியான சூழலில் தான், ஆர்எஸ்எஸ் பேரணியை தொடங்கி வைத்து சர்ச்சைக்குள் சிக்கினார் தளவாய். பேரணி நடந்த இரண்டாவது நாளே, அதிமுக அமைப்புச் செயலாளர், குமரி கிழக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்புகளில் இருந்து தளவாயை தள்ளிவைத்தார் பழனிசாமி. இப்போது அதிமுக கூட்டணிக்கு தவெக கதவடைத்த அன்றைய தினமே, மீண்டும் தளவாய்க்கு அதே பதவிகளை வழங்கி அனைவரையும் அதிரவைத்திருக்கிறார்.
தவறுக்கு மன்னிப்புக் கோரி கடிதம் கொடுத்ததால் தளவாய்க்கு மீண்டும் பதவிகள் வழங்கப்பட்டதாக பழனிசாமி சொன்னாலும் தற்போதைய அரசியல் சூழலில் பாஜக ஆதரவாளரான தளவாய்க்கு பறிக்கப்பட்ட பதவிகளை மீண்டும் அளித்திருப்பதன் மூலம் பாஜகவுக்கு பச்சைக்கொடி காட்டி இருக்கிறார் பழனிசாமி என்ற பேச்சுக்கள் அரசியல் அரங்கில் எதிரொலிக்கின்றன.
“பாஜகவுடன் இனி எப்போதும் உறவில்லை” என அதிமுக முக்கிய தலைவர்கள் சொல்வதெல்லாம் பெயரளவுக்குத்தான். தேர்தல் நெருங்க நெருங்க எல்லாமே மாறிவிடும். தளவாய் ஆர்எஸ்எஸ் பேரணி, மற்றும் இந்து மதம் சார்ந்த நிகழ்வுகளில் பங்கேற்பது அவரது தனிப்பட்ட ஈடுபாடு. அதை கட்சிக்குள்ளே இருப்பவர்கள் அரசியலாக்கி விட்டனர்” என்கிறார்கள் குமரி மாவட்ட அதிமுக மூத்த முன்னோடிகள்.
இதுதொடர்பாக தளவாய் சுந்தரத்திடம் கேட்டபோது, “அதிமுகவில் நான் வகித்துவந்த பொறுப்புகள் எடுக்கப்பட்டது குறித்தும் இப்போது மீண்டும் அதே பொறுப்புகளை வழங்கி இருப்பது குறித்தும் தற்போது எந்தக் கருத்தும் சொல்ல விரும்பவில்லை” என்றார். தளவாய்க்கு அதிமுகவில் மீண்டும் பொறுப்புகள் வழங்கப்பட்டதில் குமரி மாவட்டத்தில் அதிமுகவினரை விட பாஜகவினர் இப்போது படு குஷியில் இருக்கிறார்கள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT