Published : 20 Nov 2024 01:34 AM
Last Updated : 20 Nov 2024 01:34 AM
ஒப்பந்ததாரர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை விரைவாக முடிக்காவிட்டாலும், சாலை தரமாக இல்லாவிட்டாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் எ.வ. வேலு அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில், நெடுஞ்சாலைத் துறை மூலம் ரூ.16,202 கோடியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் 74 சாலைப் பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில், பணிகளின்போது ஏற்படும் இடர்பாடுகள் குறித்து, அதிகாரிகளுடன் அமைச்சர் எ.வ.வேலு ஆலோசனை நடத்தினார். அப்போது அமைச்சர் பேசியதாவது: அமைக்கப்படும் சாலைகளின் இருபுறமும் வடிகால் வசதி செய்ய வேண்டும். கண்காணிப்புப் பொறியாளர்கள் அனைவரும், சாலைப் பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்ய வேண்டும். சாலைப் பணிகளில் குறைபாடு இருந்தால், சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மட்டுமின்றி, பொறியாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நில எடுப்புப் பணிகளில் காலதாமதம் ஏற்படும்போது, கண்காணிப்புப் பொறியாளர்கள், அது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களின் கவனத்து்ககு கொண்டு செல்ல வேண்டும். 2021-22-ம் ஆண்டில் முதல்வர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சில சாலைப் பணிகள் இதுவரை முடிக்கப்படவில்லை. எனவே, விரைவில் இந்தப் பணிகளை முடிக்க வேண்டும். ஒப்பந்ததாரர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகளை முடிக்காவிட்டாலும், சாலை தரமாக இல்லாவிட்டாலும் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நெடுஞ்சாலைத் துறையில் உள்ள ஆய்வு மாளிகைகளை சிறந்த முறையில் பராமரிக்க வேண்டும். தார் சாலைகள் அமைக்கும்போது, அதன் கனம் சரியான அளவில் இருக்கிறதா என்பதை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். நிலுவையில் உள்ள பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமநாதபுரத்தில் நடைபெறும் சாலைப் பணிகளில் சில, 40 சதவீதம் வரை முடிக்கப்படாமல் உள்ளன. இப்பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். சிஆர்ஐடிபி திட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள பணிகளை முடிக்க வேண்டும். இந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குள் அனைத்து பணிகளையும் முடிக்க வேண்டும்.
மேலும், நெடுஞ்சாலைத் துறையின் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகு, திட்டங்கள் அலகு, தேசிய நெடுஞ்சாலை அலகு, நபார்டு மற்றும் கிராமச் சாலைகள் அலகு, பெருநகர அலகு, சென்னை-கன்னியாகுமரி தொழிற்தட திட்ட அலகு, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுத் திட்டம்-II அலகு மற்றும் தமிழ்நாடு சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் ஆகிய அனைத்து அலகுகளிலும் நிலுவைப் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்தக் கூட்டத்தில், நெடுஞ்சாலைத் துறைச் செயலர் ஆர்.செல்வராஜ், தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்ட இயக்குநர் எஸ்.ஏ.இராமன், நெடுஞ்சாலைத் துறையின் முதன்மை இயக்குநர் ஆர்.செல்வதுரை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலகின் தலைமைப் பொறியாளர் சத்யபிரகாஷ், நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய இயக்குநர் எம்.சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...