Published : 20 Nov 2024 12:52 AM
Last Updated : 20 Nov 2024 12:52 AM

திருச்செந்தூர் கோயில் யானை மீது தவறு ஏதுமில்லை: திருச்சி பாகன் கருத்து

திருச்சி: ​திருச்சியில் கோயில் யானையைப் பராமரித்துவரும் அனுபவமிக்க யானைப் பாகன் ஒருவர் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: பொதுவாக நாம் வீட்டில் ரிலாக்ஸாக இருந்தாலும், வெளியாட்கள் வந்தால் சற்று கவனமாகவும், முன்னெச்சரிக்கையாகவும் இருப்போம். அதேபோல, யானைகள் கோயில் வளாகத்தில் பக்தர்கள் முன் நிற்கும்போது நிதானமாகவும், சகஜமாகவும் இருக்கும். அதன் கூடாரத்தில் இருக்கும்போது சற்று கவனமாகவும், முன்னெச் சரிக்கையுடனேயே இருக்கும். அதுவே அதன் குணம்.

திருச்செந்தூரில் தெய்வானை யானை தன் கூடாரத்தில் ஓய்வாக இருந்தபோது, உதவி பாகன் உதயகுமாரின் உறவினரான சிசுபாலன் யானைக்கு பிடிக்காத ஏதோ ஒரு விஷயத்தை செய்திருக்க வேண்டும். அதனால் கோபமடைந்த யானை, அவரை தாக்கி இருக்கலாம். அதேநேரத்தில், உதவி பாகன் உதயகுமார் உடனடியாக அருகே செல்லாமல் யானையை அதட்டி இருந்தால், யானை அமைதியாகி இருக்கும். அவர் பதற்றத்தில் சிசுபாலனை மீட்கச் செல்ல, தன் அருகே வந்தது உதவி பாகன்தான் எனத் தெரியாமல் யானை அவரையும் தாக்கி இருக்கக்கூடும்.

ஏனென்றால், இந்த சம்பவம் நடந்த சில நிமிடங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பிய யானை, தன் பாகனை தேடத் தொடங்கியதைக் காணமுடிந்தது. தெய்வானை யானை அமைதியான சுபாவம் கொண்டது. இந்த சம்பவத்தை ஒரு விபத்து என்று கூறலாம். யானையின் தவறு என்று கூற முடியாது. அதேபோல, திருச்செந்தூர் உள்ளிட்ட பெரும்பாலான கோயில்களில் யானைகள் குளித்து விளையாட பிரத்தியேக தண்ணீர் தொட்டிகள், நடைபயிற்சி மேற்கொள்ள யானைகளுக்கான பிரத்தியேக நடைபாதைகள் என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது. அதனால், கோயில் யானைகள் முன்பைவிட தற்போது மகிழ்ச்சியாகவே உள்ளன. யானைகளை புத்துணர்வு முகாமுக்கு போக வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x