Published : 20 Nov 2024 12:28 AM
Last Updated : 20 Nov 2024 12:28 AM
தருமபுரி: விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கி வரும் உதவித்தொகையை தமிழக விவசாயிகளிடம் கொண்டு சேர்க்காமல், திட்டத்துக்கு தமிழக அரசு முட்டுக்கட்டை போடுகிறது என்று பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கூறினார்.
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியில் உள்ள பாரத மாதா ஆலயத்தில் 2022-ல் போலீஸாரின் தடையை மீறி நுழைந்தது தொடர்பாக கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு, தருமபுரி மாவட்ட கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜராவதற்காக கே.பி.ராமலிங்கம் உள்ளிட்டோர் தருமபுரி நீதிமன்றத்துக்கு நேற்று வந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் கே.பி.ராமலிங்கம் கூறியதாவது: தமிழகத்துக்கு மத்திய அரசால் வழங்கப்பட்ட நிதிக்கான செலவினங்கள் தொடர்பான அறிக்கைச் சான்றிதழை மத்திய அரசிடம் வழங்கவில்லை. இதனால்தான், தமிழகத்துக்கு கூடுதல் நிதியை மத்திய அரசால் வழங்க முடியாமல் உள்ளது. அதேநேரத்தில், இந்தியாவிலேயே அதிகமான நிதியை பெற்றிருக்கும் மாநிலம் தமிழகம் மட்டும்தான். தமிழக அரசு கேட்காமலேயே, மத்திய அரசு தமிழகத்துக்கு அதிக நிதியை வழங்கியுள்ளது. தமிழக வளர்ச்சியிலும், மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் பாஜக அக்கறை செலுத்தி வருகிறது.
ஆனால், மத்திய அரசு நிதி வழங்கவில்லை என்று கூறி மக்களை திமுக ஏமாற்றக் கூடாது. அவர்கள் செய்யும் தவறுகளை மறைத்து, மத்திய அரசு மீது பழி சுமத்தக் கூடாது. மத்திய அரசு முறையாகச் செயல்படுகிறது. தமிழக அரசுதான் முறையற்ற நிர்வாகம் நடத்தி வருகிறது. தமிழக முதல்வர் இனியாவது தன்னை திருத்திக் கொள்ள வேண்டும். மத்திய அரசிடம் இருந்து முறையாக நிதியைப் பெற்று, மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வீதம் மத்திய அரசு வழங்கி வரும் உதவித்தொகையை தமிழக விவசாயிகளிடம் கொண்டு சேர்ப்பதில் மாநில அரசு சரியாக செயல்படவில்லை. இந்த திட்டத்துக்கு தமிழக அரசு வேண்டுமென்றே முட்டுக்கட்டை போடுகிறது.
விரைவில் மத்திய அரசு சார்பில் இந்த திட்டம் தொடர்பாக முகாம்கள் நடத்தி, விண்ணப்பங்கள் பெற்று, தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் உதவித்தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT