Published : 19 Nov 2024 12:26 PM
Last Updated : 19 Nov 2024 12:26 PM

அறப்போர் இயக்கத்துக்கு எதிரான அவதூறு வழக்கு: இபிஎஸ் நேரில் ஆஜர்; விசாரணை டிச.11-க்கு ஒத்திவைப்பு

சென்னை: நெடுஞ்சாலை துறை டெண்டர்களில் முறைகேடு என அவதூறு பரப்புவதாக அறப்போர் இயக்கத்துக்கு எதிராக தான் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சாட்சியம் அளித்தார். இதையடுத்து இவ்வழக்கின் விசாரணை வரும் டிச.11-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

2016-21ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அதிமுக ஆட்சியில், முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, நெடுஞ்சாலை துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 2019 முதல் 2021-ம் ஆண்டுகள் வரையில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் பணிகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தலைமைச் செயலர், நெடுஞ்சாலை துறை, லஞ்ச ஒழிப்புத் துறைகளிடம் அறப்போர் இயக்கத்தின் சார்பில் ஜூலை 22-ம் தேதி புகார் அளிக்கப்பட்டிருந்தது.

நல்ல நிலையில் உள்ள சாலைகளை மீண்டும் அமைப்பதற்கு இந்த டெண்டர்களில் சேர்த்தால், திட்டமதிப்பு அதிகமாகி, அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகாரில் குறிப்பிட்டிருந்தது. இதுதொடர்பாக வெளியான செய்தியை அறப்போர் இயக்கம் சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தது.இதனால் தனக்கு அவப்பெயர் ஏற்படுத்தியதுடன், மன உளைச்சலும் ஏற்படுத்தியுள்ளதாக கூறி அறப்போர் இயக்கம், அதன் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடெஷ், இணை ஒருங்கிணைபாளர் ஜாகிர் உசேன் ஆகியோருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வழக்கு தொடர்ந்துள்ளார்.

மான நஷ்ட ஈடாக ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். தனக்கு எதிராக உண்மைக்கு புறம்பான கருத்துகளை வெளியிடவும் அறப்போர் இயக்கத்திற்கும், அதன் நிர்வாகிகளுக்கும் தடை விதிக்க வேண்டுமென கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எடப்பாடி பழனிசாமி குறித்து கருத்து தெரிவிக்க அறப்போர் இயக்கத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இந்த பிரதான வழக்கில், சாட்சிகளின் வாக்குமூலங்கள் பதிவுக்காக மாஸ்டர் நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கில் சாடசியம் அளிப்பதற்காக, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் நீதிபதி மகாலட்சுமி முன்பு, அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை ஆஜராகி, ஆவணங்களை சமர்ப்பித்து சாட்சியம் அளித்தார். இதையடுத்து இந்த வழக்கின் விசாரணை டிச.11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. அன்றையதினம் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x