Published : 19 Nov 2024 10:31 AM
Last Updated : 19 Nov 2024 10:31 AM

கூட்டமா வாங்க... சேரோட போங்க! - நூதன முறையில் பொதுக் கூட்டத்துக்கு ஆள் சேர்த்த திருப்பூர் அதிமுக

இப்போதெல்லாம் அரசியல் கட்சி நிகழ்ச்சிகளுக்கு கூட்டம் சேர்ப்பதற்குள் கட்சிக்காரர்களுக்கு தாவு தீர்ந்துவிடுகிறது. காசு கொடுத்து கூட்டி வந்தாலும் ‘கொள்கை பிடிப்பில்லாததால்(!)’ பாதியிலேயே வண்டியைக் கிளப்பிவிடுகிறார்கள். இதைப் புரிந்து கொண்டு திருப்பூர் அதிமுகவினர் அட்டகாசமான ஒரு உத்தியை அரசியல் உலகத்துக்கு அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள்.

திருப்பூர் பெருமாநல்லூரில் கடந்த ஞாயிற்றுக் கிழமை திருப்பூர் மாநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் வேல்குமார் சாமிநாதன் ஏற்பாட்டில் அதிமுக-வின் 53-ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. மக்களை ஈர்க்கும் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்களில் கூட கூட்டத்தினர் அங்கொருவரும் இங்கொருவருமாக அலை பாய்ந்தபடியே இருப்பார்கள்.

ஆனால், இந்தக் கூட்டத்துக்காக ‘ஆர்வமுடன்’ திரண்டு வந்திருந்த சுமார் 2 ஆயிரம் பேரும் அப்படியே ஆணி அடித்தது போல் சேர்களில் அசையாமல் உட்கார்ந்து ‘கருத்தாய்’ பொதுக்கூட்டக் கருத்துகளை உள்வாங்கினார்கள். முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் 2026-ல் அதிமுக-வை அரியணையில் அமர்த்துவது தொடர்பாக பொதுக்கூட்டத்தில் ஆவேசமாக பேச, அதைக் கூட்டம் கைதட்டி ஆர்ப்பரித்தது.

மேடைக்கு முன்னால் அமர்ந்திருந்த அனைவரும் அங்கிங்கு நகராமல் அப்படியே உட்கார்ந்திருந்ததை பார்த்து முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்களுக்கே ‘லைட்டா’ சந்தேகம் வந்துவிட்டது. ஆனால், கூட்டத்தை ஏற்பாடு செய்தவருக்குத்தானே அந்த ரகசியம் தெரியும்!

வழக்கமாக பணம் கொடுத்து கூட்டம் கூட்டுபவர்கள் இந்தக் கூட்டத்துக்கு சற்று வித்தியாசமாக யோசித்திருக்கிறார்கள். “கூட்டத்துக்கு வரும் ஒவ்வொருவருக்கும் ஒரு பிளாஸ்டிக் சேர் சொந்தம். கூட்டத்தில் அவரவர் அமர்ந்திருக்கும் சேர்களை கூட்டம் முடிந்ததும் அவர்களே வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்” என்று விநோத பிரச்சாரம் செய்து ‘விழாக் கமிட்டி’ கூட்டம் கூட்டி இருக்கிறது.

இதற்காக கூட்ட மேடைக்கு முன்பாக 2 ஆயிரம் புத்தம் புது பிளாஸ்டிக் சேர்களை வாங்கிப் போட்டிருந்தார்கள். முன்னறிவிப்பைப் பார்த்துவிட்டு முன்கூட்டியே திரண்ட மக்கள், பொதுக்கூட்ட திடலை ‘கிரவுண்ட் ஃபுல்’ ஆக்கிவிட்டார்கள். இதில் பலபேர் குடும்பம் குடும்பமாக வந்து சேர்களை ஆக்கிரமித்துக் கொண்டார்கள். கூட்டம் முடிவதற்காக காத்திருந்தவர்கள், கூட்டம் முடிந்ததுமே ஒரே குடும்பத்தில் அரை டஜன் சேர்கள் வரை பிரத்யேகமாக வண்டி பிடித்து அள்ளிச் சென்றனர்.

கட்சி கூட்டத்துக்கு ஆள் சேர்த்ததுடன் சேர்த்த கூட்டத்தை கலையவிடாமல் பார்த்துக் கொள்ள திருப்பூர் அதிமுகவினர் கையாண்ட இந்த புது உத்தியானது இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. திமுகவின் ‘திருமங்கலம் ஃபார்முலா’வை போல அதிமுகவின் இந்த ‘திருப்பூர் ஃபார்முலா’வை கண்டு பலரும் வாய் பிளக்கிறார்கள். இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த வேல்குமார் சாமிநாதன் 2026 பேரவைத் தேர்தலில் போட்டியிட அதிமுக தலைமையிடம் பேசி வருவதாகவும் ஒரு தகவல் தடதடக்கிறது. அப்படி போட்டியிட்டால், ஓட்டுக்காக அண்ணாச்சி என்ன உத்தி வைத்திருக்கிறாரோ தெரியவில்லை.

இது குறித்து அவரிடம் கேட்டதற்கு, “கூட்டத்தில் பங்கேற்ற அனைவருக்கும் நல உதவிகள் வழங்கும் யோசனை இருந்தது. அதை சேர்களாகவே வழங்கி விட்டோம். டூ-இன் ஒன் பிளான். இதற்காக 2 ஆயிரம் பிளாஸ்டிக் சேர்கள் வாங்கிப் போட்டோம். நீங்கள் அமர்ந்திருக்கும் சேர் உங்களுக்கேன்னதும் அத்தனை பேருக்கும் அவ்வளவு மகிழ்ச்சி” என்றார் எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x