Published : 19 Nov 2024 05:07 AM
Last Updated : 19 Nov 2024 05:07 AM
சென்னை: மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்பு திட்டங்களுக்கு நிதிக் குழு ஓர் உச்சவரம்பை பரிந்துரை செய்ய வேண்டும். மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று 16-வது நிதி ஆணைய குழுவிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
மத்திய அரசின் 16-வது நிதி ஆணையத்தின் தலைவர் அரவிந்த் பனகாரியா தலைமையில், அதன் உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர் 4 நாள் பயணமாக தமிழகம் வந்துள்ளனர். இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி சோழா ஓட்டலில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளுடன் நிதிக் குழுவினர் நேற்று காலை ஆலோசனை நடத்தினர். இதில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: சுகாதாரம், கல்வி, சமூகநலம், வேளாண்மை ஆகிய துறைகளின் முன்னேற்றத்துக்கான முக்கிய திட்டங்களை, பெரும்பாலும் மாநில அரசுகள்தான் வடிவமைத்து செயல்படுத்துகின்றன. ஆனால், அதற்கேற்ற வருவாயை பெருக்குவதற்கான அதிகாரங்கள் மாநில அரசுகளிடம் குறைவாகவே உள்ளன.
அந்த வகையில், கடந்த 15-வது நிதிக் குழு பரிந்துரைப்படி, மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கும் வரி வருவாய் பங்கை 41 சதவீதமாக உயர்த்தியதை வரவேற்கிறோம். அதேநேரம், இந்த பரிந்துரைக்கு மாறாக, கடந்த 4 ஆண்டுகளில் மத்திய அரசின் மொத்த வரி வருவாயில் 33.16 சதவீதம் மட்டுமே மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. மாநில வரிப் பகிர்வில் உள்ள மேல்வரி, கூடுதல் கட்டணம் ஆகியவற்றை மத்திய அரசு பெருமளவு உயர்த்தியதே இதற்கு முக்கிய காரணம். மேலும், மத்திய, மாநில அரசுகள் இணைந்து செயல்படுத்தும் திட்டங்களுக்கான மாநில அரசின் பங்கு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதுவும் தமிழகம் போன்ற மாநிலங்களின் நிதிநிலையை பாதிக்கிறது.
எனவே, மத்திய - மாநில அரசுகளின் பங்களிப்பு திட்டங்களுக்கு நிதிக் குழு ஓர் உச்சவரம்பை பரிந்துரை செய்ய வேண்டும். மத்திய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். தமிழகத்துக்கான வரிப் பகிர்வு 9-வது நிதிக் குழு பரிந்துரைத்த 7.931 சதவீதத்தில் இருந்து 15-வது நிதிக் குழு பரிந்துரைத்த 4.079 சதவீதம் என வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது தமிழகத்தின் முன்னேற்றத்தை தொய்வடைய செய்து, தண்டிப்பதுபோல உள்ளது. எனவே, வரிப் பகிர்வு முறையில் சமச்சீரான வளர்ச்சி, திறமையான நிர்வாகம் ஆகியவற்றை சம குறிக்கோள்களாக கருதி பரிந்துரை வழங்க வேண்டும்.
இந்தியாவில் கடந்த 45 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் மறுபகிர்வு முறை மூலம் எதிர்பார்த்த அளவு வளர்ச்சி ஏற்படவில்லை. எனவே, வளர்ந்த மாநிலங்களின் வளர்ச்சியை பாதிக்காத வகையில், தேவையான நிதியை வழங்கும் ஒரு புதிய அணுகுமுறையை நிதிக் குழு வடிவமைக்க வேண்டும். கடந்த காலங்களில் பல்வேறு நிதிக் குழுக்களின் பரிந்துரைகளால் தமிழகத்துக்கு இழைக்கப்பட்ட அநீதி களுக்கு உரிய தீர்வை 16-வது நிதிக் குழு வழங்கும் என்று நம்புகிறோம்.
ஒவ்வொரு மாநிலமும் அதன் முழு திறனுக்கு ஏற்ற வளர்ச்சியை எட்டுவதன் மூலமாகவே இந்திய திருநாட்டை உலக அரங்கில் பொருளாதார வலிமை கொண்ட ஒரு மாபெரும் நாடாக நிலைநிறுத்த முடியும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
முதல்வர் கூறிய 3 பிரச்சினைகள்: நிதிக்குழு கூட்டத்தில், தமிழகத்தின் 3 முக்கிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டி முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: இயற்கை பேரிடர்களால் தமிழகம் பேரழிவை சந்தித்து வருகிறது. இந்த பாதிப்புகளை சரிசெய்ய அதிக நிதி செலவிட வேண்டி உள்ளதால், வளர்ச்சி திட்டங்களுக்கு போதிய நிதி ஒதுக்க முடியவில்லை. முதியோர் எண்ணிக்கை அதிகரிப்பதால், அவர்களது தேவைகளை பூர்த்திசெய்ய அடுத்த 10 ஆண்டுகளில் உரிய பொருளாதார வளர்ச்சியை அடைவதுடன், பல துறைகளில் அதிக முதலீடுகள் செய்வது அவசியம். மேலும், நகர்ப்புற கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது, அதற்கான நிதி ஆதாரங்களை பெருக்குவது முக்கிய சவாலாக உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு, பேரிடர் துயர் தணிப்பு பணிகளை உடனுக்குடன் மேற்கொள்ள உரிய நிதி வழங்கவும், சமூக முதலீடுகளுக்கு தேவையான நிதி ஆதாரம் வழங்கவும், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக நிதி, மானியங்கள் வழங்கவும் நிதிக் குழு பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT