Published : 19 Nov 2024 01:30 AM
Last Updated : 19 Nov 2024 01:30 AM
தமிழகம் முழுவதும் குத்தகை காலம் முடிவடைந்து விட்டால் சம்பந்தப்பட்ட மதுபானக் கடைகளை உடனடியாக காலி செய்து கொடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என டாஸ்மாக் நிர்வாக இயக்குநருக்கு உயர் நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி காமன்தொட்டியை சேர்ந்த சுந்தர் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘எனக்கு சொந்தமான கட்டிடத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடைக்கான ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டதால் காலி செய்து கொடுக்கும்படி கூறினேன். அதன்காரணமாக கிருஷ்ணகிரி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சுந்தரின் தூண்டுதலின்பேரில் எனது பேக்கரியில் திருட்டுத்தனமாக மதுபான விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறி என் மீது போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். எனவே, என் மீதான வழக்கை ரத்து செய்து, என்னுடைய கடையில் இயங்கி வரும் மதுபானக் கடையையும் காலி செய்து கொடுக்க உத்தரவிட வேண்டும்’ என கோரியிருந்தார்.
இந்த வழக்கை கடந்தமுறை விசாரித்த நீதிபதி பி.வேல்முருகன், தமிழகம் முழுவதும் ஒப்பந்த காலம் முடிவடைந்த பின்னரும் காலி செய்து கொடுக்கப்படாமல் எத்தனை கடைகள் இயங்கி வருகின்றன என்பது குறித்த விவரங்களுடன் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி பி.வேல்முருகன் முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் நிர்வாக இயக்குநரான விசாகன் நேரில் ஆஜராகியிருந்தார். அவரது சார்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார். மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் என்.மனோகரன் ஆஜராகி, மனுதாரருக்கு சொந்தமான கடையை டாஸ்மாக் நிர்வாகம் கடந்த சில தினங்களுக்கு முன்பாக காலி செய்து கொடுத்துவிட்டதாக தெரிவித்தார்.
அதையடுத்து நீதிபதி, ‘‘கடைக்கான குத்தகைக்காலம் கடந்த 2019-ம் ஆண்டுடன் முடிவடைந்த பிறகும் கடையை காலி செய்து கொடுக்காதது ஏன்? கடையை காலி செய்யச் சொன்னால் பொய் வழக்கு போட்டு கைது செய்வீர்களா? ஏன் இப்படி அடாவடி செய்கிறீர்கள். குடிநீர், மின் இணைப்பு வழங்குவதுபோல ஒவ்வொரு வீட்டுக்கும் மதுபானத்தையும் குழாய் மூலமாக வழங்க வேண்டியதுதானே’’ என சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
மேலும், டாஸ்மாக் மதுபானக்கடை வேண்டாம் என மக்கள் போராடினால் போலீஸாரை கொண்டு மிரட்டி கடை நடத்துவீர்களா? மது விற்பனை மூலம் வருமானம் பார்க்கும் டாஸ்மாக் நிர்வாகம், மக்கள் நலனை கண்டுகொள்வது இல்லை. இதுபோன்ற புகார் மீண்டும் வந்தால் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும். அரசுக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்போது, தனக்கு சொந்தமான நிலத்தில் உள்ள அரசு கடையை அகற்ற தனிநபருக்கு அதிகாரமில்லையா? சட்டம் அவருக்கு துணைபுரியாதா’’ எனவும் கருத்து தெரிவித்தார்.
பின்னர், தமிழகம் முழுவதும் வாடகை ஒப்பந்தக் காலம் முடிவடைந்து விட்டால் அந்தக் கடையை டாஸ்மாக் நிர்வாகம் உடனடியாக காலி செய்து கொடுக்க வேண்டும். பொதுமக்கள் அங்கு மதுபானக்கடை வேண்டாம் என கூறினாலும், அந்தக் கடையை அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த வழக்கில் மனுதாரரான சுந்தர் மீதான வழக்குக்கு எந்த முகாந்திரமும் இல்லை என கூறி அதை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT