Published : 19 Nov 2024 01:12 AM
Last Updated : 19 Nov 2024 01:12 AM
சென்னை: சோதனை முடிவில் பிரபல லாட்டரி அதிபர் மார்ட்டின் பணம் ரூ.12.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், ரூ.6.42 கோடி வங்கி பணம் முடக்கப்பட்டுள்ள தாகவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை நங்கநல்லூரைச் சேர்ந்த தொழில் அதிபர் ராஜராஜன் என்பவரது வீட்டில் கடந்த 2012-ம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர். இதில் ரூ.7.25 கோடி பணம் சிக்கியது. இதைத்தொடர்ந்து மார்ட்டின், அவரது மனைவி லீமா ரோஸ் உள்ளிட்டவர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த விவகாரத்தை அமலாக்கத்துறை கையில் எடுத்தது. இதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் நடத்திய புலன் விசாரணையில், லாட்டரி அதிபர் மார்ட்டின், சிக்கிம் மாநிலத்தில் லாட்டரி விற்பனையில் முறைகேடு செய்து ரு.910 கோடியை பல்வேறு நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பது தெரிய வந்தது.
அதனடிப்படையில் அவர் தொடர்புடைய இடங்களில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அவருக்கு சொந்தமான ரூ.457 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் மார்ட்டின் தொடர்புடைய இடங்களிலும் சென்னை போயஸ் கார்டனில் வசிக்கும் அவரது மருமகனான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூன் வீட்டிலும் கடந்த 14 முதல் 17-ம் தேதி வரை சோதனை நடத்தினர். மொத்தம் 22 இடங்களில் சோதனை நடைபெற்றது.
சோதனை நிறைவடைந்துள்ள நிலையில், அமலாக்கத்துறை தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் நேற்று வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: மார்ட்டின் மற்றும் அவரது நிறுவனமான பியூச்சர் கேமிங் மற்றும் ஓட்டலுக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், மேகாலயா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் உள்ள 22 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையில் வழக்கு தொடர்பான பல்வேறு குற்ற ஆவணங்கள், டிஜிட்டல் சாதனங்கள் சிக்கின. கணக்கில் வராத ரூ.12 கோடியே 41 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட் டது. ரூ.6 கோடியே 42 லட்சம் வங்கி பணம் முடக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT