Published : 19 Nov 2024 01:04 AM
Last Updated : 19 Nov 2024 01:04 AM

வளர்ந்த மாநிலங்களை பாதிக்காத வகையில் நிதி பகிர்வு தேவை: திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தல்

சென்னை: வளர்ந்த மாநிலங்களைப் பாதிக் காத வகையில் நிதிப்பகிர்வு இருக்க வேண்டும் என்று சென்னையில் நேற்று நடைபெற்ற 16-வது நிதிக் குழு ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்திப் பேசியதுடன் அதுதொடர்பாக மனுக்களும் அளிக்கப்பட்டன.

இக்கூட்டத்தில் அளிக்கப்பட்ட மனுக்கள் விவரம்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அளித்த மனு: மாநில வரிப் பகிர்வான 41 சதவீதத்தை 50 சதவீதமாக உயர்த்த வேண்டும். செஸ் மற்றும் கூடுதல் தீர்வை நிதியும் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். மாநிலங்களுக்கான ஒதுக்கீட்டை தேவை, திறன் அடிப்படையில் கணக்கிட வேண்டும். குறிப்பிட்ட சில தேவைகளைப் பூர்த்தி செய்ய தமிழ்நாட்டுக்கு கூடுதல் நிதியுதவி அளிக்க பரிந்துரைக்க வேண்டும். மத்திய-மாநில அரசுகளுக்கான கடன் வரம்பை சமமாக நிர்ணயிக்க வேண்டும்.

அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த மனு: மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வு 41 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும். அதோடு மத்திய அரசு வசூலிக்கும் செஸ் மற்றும் கூடுதல் தீர்வை வருவாயும் மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டும். ஜிஎஸ்டி நடைமுறைக்கு வந்த பிறகு மாறி வரும் நிதி நிலையை கருத்தில்கொண்டு மாநிலங்களுக்கான நிதி ஆதாரங்களை அதிகரிக்கும் வகையில் நிதி மாற்ற முறையை மாற்றியமைக்க வேண்டும். நிதிப்பகிர்வு முறை வளர்ந்த மாநிலங்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் இருக்கக் கூடாது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சச்சிதானந்தம், கந்தர்வக்கோட்டை எம்எல்ஏ சின்னதுரை அளித்த மனு: கூட்டாட்சி தத்துவத்தைப் பின்பற்றி மத்திய வரி வருவாயில் தமிழகத்துக்கான வரிப் பகிர்வை 50 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும். சிறப்புத் திட்டங்கள், அரசு நலத் திட்டங்கள் மூலம் வளர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு கூடுதல் நிதி வழங்கப்பட வேண்டும். மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழகம் போன்ற மாநிலங்களுக்கு ஊக்குவித்தல் நிதி வழங்க வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணை செயலாளர் நா.பெரிய சாமி, மாநில செயற்குழு உறுப்பினர் வஹிதா நிஜாம் அளித்த மனு: மத்திய நிதி வருவாயில் தமிழகம் பெரும் பங்களிப்பு செய்கிறது. ஆனால், தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கும் நிதியோ மிகக் குறைவு. உள்ளாட்சி அமைப்பு களுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். பேரிடர் நி்வாரணத்துக்கு கூடுதல் நிதி வழங்க ஆணையம் பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பாஜக மாநில ஒருங்கிணைப்புக் குழு தலைவர் ஹெச்.ராஜா, காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.பி. பீட்டர் அல்போன்ஸ், தேமுதிக சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. நல்லதம்பி, வழக்கறிஞர் ஜனார்த்தனம், ஆம் ஆத்மி கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் ஜோசப் ராஜா, மாநில மகளிரணி தலைவி ஸ்டெல்லா மேரி உள்ளிட்டோர் தங்களது சார்பில் கருத்துகளை தெரிவித்ததுடன் மனுக்களையும் அளித்துள்ளனர். கூட்டத்தில் பங்கேற்க முடியாத நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சார்பிலும் மனு அளிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x