Published : 19 Nov 2024 12:35 AM
Last Updated : 19 Nov 2024 12:35 AM
மதுரை: ராமேசுவரத்தில் அக்னி தீர்த்தம் அசுத்தமாவதைத் தடுக்க, ரூ.52.60 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: ராமேசுவரம் கோயில் அக்னிதீர்த்தத்தை மக்கள் புனிதமாகக் கருதுகின்றனர். ஆனால், அக்னி தீர்த்தம் அருகே ராமேசுவரம் நகராட்சியில் இருந்து வெளிவரும் கழிவுநீர் கடலில் கலக்கிறது. இதனால் கடல் அசுத்தமாகி வருகிறது. இதைத்தடுக்கவும், சரி செய்யவும் கோரி அதிகாரிகளுக்கு மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அக்னி தீர்த்தம் அருகே நகராட்சி கழிவுநீர், கடலில் கலப்பதை தடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரியகிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. ராமேசுவரம் நகராட்சி வழக்கறிஞர் கே.சரவணன் ஆஜராகி வாதிடும் போது, “ராமேசுவரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வெளியேறும் கழிவு நீரைசுத்திகரிப்பதற்காக அங்குள்ள நிலப்பகுதியில் ரூ.52.60 கோடி திட்ட மதிப்பீட்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பாதாள சாக்கடைத் திட்டம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு மின் இணைப்பு பெறப்பட்ட பின்பு, விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். இங்கு சுத்திகரிக்கப்படும் தண்ணீர் பாம்பன் பகுதியிலுள்ள 300 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் மரங்கள், புற்கள் வளர்க்க பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் அங்கு பறவைகள் சரணாலயமும் அமைக்கப்பட உள்ளது” என்றார். இதனைப் பதிவுசெய்த நீதிபதிகள், தங்களது தரப்பு பதிலை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு, விசாரணையை நவ.27-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT