Published : 18 Nov 2024 07:51 PM
Last Updated : 18 Nov 2024 07:51 PM

“நடிகை கஸ்தூரியை தீவிரவாதி போல நடத்துவது சரியல்ல” - தமிழிசை காட்டம்

சென்னை: நடிகை கஸ்தூரியை தீவிரவாதி போல தமிழக காவல் துறை நடத்துவது சரியல்ல என்றும், அது பாரபட்சமான நடவடிக்கை என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.

சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனாரின் நினைவு நாளை முன்னிட்டு, சென்னை கிண்டி காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள அவரின் திருவுருவச்சிலைக்கு தமிழிசை சவுந்தரராஜன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருக்கு நினைவஞ்சலி செலுத்துவதில் பெருமை கொள்கிறோம். தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்துக்கு ரூ.178 கோடி மேம்பாட்டு திட்டங்களை பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார்.

தமிழகத்தின் வளர்ச்சியில் மத்திய அரசு அக்கறை கொண்டுள்ளது. அதனால்தான் நிதிக்குழு வந்துள்ளது. கோரிக்கைகளை முதல்வர் வைத்துள்ளார். அதிகமான நிதிப் பகிர்வு தமிழகத்துக்கு கிடைக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. பட்ட மேற்படிப்புக்கான மருத்துவ கலந்தாய்வில் அரசு மருத்துவர்களுக்கான இடங்களை தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவர்கள் பெற முடியாததற்கு, அரசு மருத்துவர்களுக்கான காலி பணியிடங்களை சரியான நேரத்தில் நிரப்ப தவறுவதே காரணம்.

சமீபத்தில் மருத்துவர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். மருத்துவர்களுக்கான பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். அதே நேரத்தில் அரசு மருத்துவமனைகளை தேடி வரும் ஏழை, எளிய மக்களின் மருத்துவ தேவைகளை அரசு உறுதிசெய்ய வேண்டும். அரசு மருத்துவர்களும் மற்றும் நோயாளிகளும் நட்புறவுடன் இருக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உதவி செய்ய வழிகாட்டிகள், சமூக சேவகர்கள், அரசு மருத்துவமனை கண்காணிப்பு ஆலோசனைக்குழு நிறுவப்பட வேண்டும்.

அரசு மருத்துவர்கள் பணி நேரங்களில் தனியார் மருத்துவமனைகளுக்குச் சென்று சிறப்பு மருத்துவராக பணியாற்றுவது கட்டுப்படுத்தப்பட வேண்டும். தமிழக அரசு, மருத்துவர்களை மத்திய அரசு மருத்துவர்கள் போல முழு நேர மருத்துவ பணியாளராக பணியாற்ற வசதியாக அவர்களுக்கான பொருளாதார ஈட்டுத் தொகை ஊதியத்துடன் சேர்த்து வழங்க வேண்டும். இதன்மூலம் அவர்கள் தனியார் மருத்துவமனைகளை தேடிச்சென்று பணி செய்யத் தேவை இருக்காது.

திருமாவளவனின் மனதை புரிந்துகொண்டு அதை சரி செய்கிறேன் என்று முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். ஆனால், தமிழக மக்களின் மனதை புரிந்துகொண்டு சரி செய்கிறேன் என்று சொல்ல மறுக்கிறார். சிப்காட் தொழிற்சாலை வேண்டும் என்று திருமாவளவன் கேட்டதற்கு, அதை ஒரு வருடத்துக்குள் நிறைவேற்றுகிறேன் என்று முதல்வர் சொல்கிறார்.

ஆனால், தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட வேண்டும் டாஸ்மாக் கடைகள் அகற்றப்பட வேண்டும் என்று திருமாவளவன் மாநாடு நடத்தி கோரிக்கை வைத்தார். அந்த கோரிக்கையையும் ஸ்டாலின் நிறைவேற்றுவாரா? இந்த கோரிக்கையை எவ்வளவு நாட்களில் நிறைவேற்றுவீர்கள் என்று திருமாவளவனும் கேட்க மாட்டார். திருமாவளவனுக்கு என்ன சூழ்நிலை என்றால், திமுக கூட்டணியில் இருக்கிறோம், இருக்கிறோம் என்று சொல்லிக்கொள்ள வேண்டிய சூழ்நிலை. அதனால் அவர் கேட்க மாட்டார். ஆனால், நாங்கள் கேட்போம்.

நடிகை கஸ்தூரி தவறான கருத்துகளை சொன்னார். அதற்காக மன்னிப்பும் கேட்டார். அவரை தீவிரவாதி போல தமிழக காவல் துறை நடத்துவது சரியான நடவடிக்கை இல்லை. மாநிலத்தில் எவ்வளவோ சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றில் தொடர்புடைய குற்றவாளிகளை கண்டுபிடிக்காமல், கஸ்தூரியை தீவிரவாதி போல் நடத்துவது பாராபட்சமான நடவடிக்கை. பொதுமக்களின் கருத்துரிமை பாராபட்சமாகதான் பாதுகாக்கப்படுகிறது என்பதை இங்குப் பதிவு செய்ய வேண்டும்" என்று தமிழிசை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x