Published : 18 Nov 2024 03:08 PM
Last Updated : 18 Nov 2024 03:08 PM
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான வழக்கறிஞர் அஸ்வத்தாமனை, குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்ததை ரத்து செய்யக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சென்னை காவல் ஆணையர் உள்ளிட்டோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக பதவி வகித்த ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரனின் மகனும் வழக்கறிஞருமான அஸ்வத்தாமனை போலீஸார் கைது செய்தனர். இந்நிலையில் அஸ்வத்தாமனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த செப்.19-ம் தேதியன்று உத்தரவிட்டிருந்தார்.
இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அஸ்வத்தாமனின் தாயார் விசாலாட்சி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், “போலீஸார் இயந்திரத்தனமாக செயல்பட்டு எனது மகனை குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். பூந்தமல்லி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஸ்வத்தாமனை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தது குறித்து எனக்கோ அல்லது அவருடைய மனைவிக்கோ எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. அதேபோல குண்டர் தடுப்புச்சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான ஆவணங்கள் உரிய நேரத்தில் அஸ்வத்தாமனிடம் வழங்கவில்லை.
இதற்கான ஆவணங்கள் புழல் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அறிவுரைக் கழகமும் முறையாக பரிசீலிக்காமல் எங்களது கோரிக்கையை நிராகரித்து விட்டது. எந்த ஆதாரங்களும் இல்லாமல், ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு பின்னணியில் செயல்பட்டவர்களை திருப்திபடுத்தும் நோக்கில் தேசிய கட்சியில் முக்கிய நிர்வாகியாக இருந்த எனது மகனின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் எனது மகனை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்து இருப்பது சட்டவிரோதம் என்பதால் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்,” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், எம்.ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது இதுதொடர்பாக தமிழக உள்துறைச் செயலர் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் இரண்டு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT