Published : 18 Nov 2024 06:30 AM
Last Updated : 18 Nov 2024 06:30 AM
சென்னை: மத்திய அரசின் 16-வது நிதி ஆணைய குழுவினர் சென்னை வந்த நிலையில், அவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். மேலும் முதல்வர், அமைச்சர்கள், அதிகாரிகளுடன் குழுவினர் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்திக்கிறது.
மத்திய அரசு 16-வது நிதி ஆணையத்தை அரவிந்த் பனகாரியா தலைமையில் அமைத்துள்ளது. ஆணையத்தின் உறுப்பினர்களாக அஜய் நாராயண் ஜா, ஆனி ஜார்ஜ் மேத்யூ, மனோஜ் பாண்டா, சவுமியா காந்தி கோஷ் ஆகியோர் உள்ளனர். இந்நிலையில், இந்த குழுவினர் நேற்று சென்னை வந்தனர்.
நவ.20-ம் தேதி வரை தமிழகத்தில் இருக்கும் இவர்கள், நேற்று மாலை சென்னை நங்கநல்லூரில் வசிக்கும், பொருளாதார நிபுணரும் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநருமான சி.ரங்கராஜனை வீட்டில் சந்தித்தனர். அதன்பின், கிண்டியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அளிக்கும் இரவு விருந்தில் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர்.
இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் குழுவினரை வரவேற்றார். இன்று முதல்வர், அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். அதன்பின், தொழில் மற்றும் வர்த்தகத்துறை பிரதிநிதிகள், நகர்ப்புற, ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கருத்துக்களை கேட்கின்றனர். மாலை 5.30 மணிக்கு பத்திரிகையாளர்களை சந்திக்கின்றனர்.
இதேபோல் நாளை நவ.19-ம் தேதி நெம்மேலியில் தினசரி 150 மி்ல்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டப்பகுதி, பெரும்புதூரில் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி நிறுவனமான சால்காம்ப் வளாகத்தை பார்வையிடுகின்றனர். அங்கிருந்து மதுரை செல்லும் குழுவினர், ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு இரவு அங்கு தங்குகின்றனர். மறுநாள் 20-ம் தேதி தனுஷ்கோடி, ராமநாதபுரம் நகராட்சி, கீழடி தொல்லியல் அகழ்வு பகுதிகளை பார்வையிடுகின்றனர். பின்னர் மதுரையில் இருந்து டெல்லி புறப்பட்டு செல்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT