Published : 18 Nov 2024 08:23 AM
Last Updated : 18 Nov 2024 08:23 AM

விருதுநகர் மாவட்டத்தில் ‘மணக்கும் மல்லிகை’ சாகுபடி: சென்ட் ஆலை அமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் 5 ஆயிரம் ஏக்கரில் மதுரை மல்லிகை சாகுபடி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்ட் ஆலை அமைத்து மல்லிகைக்கு அதிக விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை, கோவிலாங்குளம், கட்டங்குடி, காரியாபட்டி, திருச்சுழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 5 ஆயிரம் ஏக்கரில் மதுரை மல்லிகைப் பூ சாகுபடி செய்யப்படுகிறது. இவை, அருப்புக்கோட்டை, மதுரை சந்தைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

மாவட்டத்தில் கொத்துச்செடி மல்லிகை மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் தோட்டக்கலைத் துறை மூலம் மல்லிகை குச்சி விற்பனை செய்யப்படுகிறது. அதோடு, ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் விற்பனை செய்யப்படும் மல்லிகை பதியம் விவசாயிகளால் அதிகம் விரும்பி வாங்கப்படுகிறது. ஒரு நாற்றுப் பதியம் குச்சி ரூ.8 முதல் ரூ.9 வரை விற்பனை செய்யப்படுகிறது. 3 முதல் 5 அடி இடைவெளியில் இவை நடவு செய்யப்படும்.

மல்லிகை நாற்று நடவுசெய்யும்போது இரு பதியம் குச்சிகளாக நடவு செய்யப்படும். அப்போதுதான், ஒன்று வளரவில்லை என்றாலும் மற்றொன்று வளரும். இவ்வாறு ஓர் ஏக்கருக்கு 3,500 குச்சிகள் நடவு செய்ய வேண்டும். இவை 8 மாதங்களில் பூக்கத் தொடங்கும். முதல் ஆண்டில் செலவு அதிகம் இருப்பதால் லாபம் குறைவாகவே இருக்கும். 3-வது ஆண்டிலிருந்தே ஓரளவு லாபம் கிடைக்கும். மாதம் ஒன்றுக்கு 1.5 டன் வரை பூக்கள் கிடைக்கும். அதிகபட்சமாக கிலோ ரூ.400 வரை வியாபாரிகளால் கொள்முதல் செய்யப்படுகிறது. அவர்களுக்கு 12 சதவீதம் கமிஷன் அளிக்க வேண்டியுள்ளது என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மானிய விலையில்... மல்லிகை சாகுபடி மேற்கொண்டு வரும் காவிரி- வைகை- குண்டாறு பாசன விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் ராம்பாண்டியன் கூறுகையில், "விருதுநகர் மாவட்டத்தில் மல்லிகை சாகுபடியை அதிகரிக்கத் தோட்டக்கலைத் துறை மூலம் உரம், பூச்சி மருந்துகள் போன்றவை மானிய விலையில் வழங்க வேண்டும். அதோடு, சென்ட் ஆலை அமைத்து ஆண்டு முழுவதும் மல்லிகையைக் கூடுதல் விலைக்குக் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் விஜயமுருகன் கூறுகையில், "மல்லிகை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு நிலையான வருமானம் கிடையாது. முகூர்த்த நாட்களில் அதிக அளவில் மல்லிகைக்கு விலை கிடைக்கும். ஆனால், மற்ற நாட்களில் போதிய விலை கிடைப்பதில்லை. திருச்சுழி, காரியாபட்டி பகுதியில் மல்லிகை சென்ட் ஆலை அமைத்தால் விவசாயிகள் பயன்பெறுவர்" என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x