Published : 18 Nov 2024 07:56 AM
Last Updated : 18 Nov 2024 07:56 AM
மருத்துவர்கள், செவிலியர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகள் தள்ளாட்டத்தில் உள்ளன. இதனால், உரிய நேரத்தில் உரிய சிகிச்சை கிடைக்காமல் சாமானியர்கள் சாபம் விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 11 ஆயிரம் அரசு மருத்துவமனைகள் உள்ளன. ஆனால், தினமும் லட்சக்கணக்கான மக்களுக்கு வைத்தியம் பார்க்கும் இந்த மருத்துவமனைகளில் சுமார் 20 ஆயிரம் மருத்துவர் பணியிடங்கள் மட்டுமே உள்ளது. அதிலும், சுமார் 4 ஆயிரம் பேர் பற்றாக்குறை. செவிலியர்களும் போதிய எண்ணிக்கையில் இல்லை.
இதனால், உரிய நேரத்தில் உரிய சிகிச்சைகள் கிடைக்காமல் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதர பணியாளர்களுக்கும் பஞ்சமாக இருப்பதால் அரசு மருத்துவமனைகள் சுகாதார சீர்கேட்டில் சிக்கித் தவிக்கின்றன. அண்மையில் ஆய்வுக் கூட்டம் நடத்திய தமிழக சுகாதாரத்துறை செயலாளர் சுப்ரியா சாஹு, அரசு மருத்துவமனைகளில் இருக்கும் சுகாதாரமற்ற கழிப்பறைகள், கழிவுநீர் தேக்கம் உள்ளிட்ட அனைத்து குறைபாடுகளையும் சரிசெய்யுமாறு அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளின் டீன்களுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் அடிப்படை வசதிகள், சுகாதாரம், உணவின் தரம் ஆகியவற்றை மாதம் ஒருமுறை கண்காணித்து அறிக்கை சமர்ப்பிக்கவும் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநருக்கு அறிவுறுத்தினார். சுகாதாரத்துறையின் இந்த நடவடிக்கையை அரசு மருத்துவர்கள் வரவேற்றுள்ளனர்.
இதுதொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளையிடம் கேட்டபோது, “தமிழகத்தில் புதிதாக அரசு மருத்துவமனைகளும், கூடுதல் கட்டிடங்களும் கட்டப்பட்டு வருகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக புதிதாக மருத்துவர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. 10 ஆண்டுகளில் அரசு மருத்துவமனைகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துவிட்டது. அதற்கு ஏற்ப மருத்துவர், செவிலியர், இதர பணியாளர் பணியிடங்களை உருவாக்க வேண்டும்.
தற்போது தமிழகம் முழுவதும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 850 மகப்பேறு மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் குறைவான அளவே மருத்துவர்கள் உள்ளனர். அரசு மருத்துவமனைகளில் தினமும் சுமார் 2 ஆயிரம் பிரசவங்கள் நடைபெறுகிறது. அதனால், அங்கு மகப்பேறு மருத்துவர் பணியிடங்களை 2 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்” என்றார்.
இதனிடையே, மருத்துவர்கள், செவிலியர்கள் பற்றாக்குறை தொடர்பாக அண்மையில் பேட்டியளித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “கரோனா காலத்தில் 1,412 செவிலியர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். அவர்களில் 1,271 பேர் காலியாக உள்ள நிரந்தர செவிலியர் பணியிடங்களில் நியமிக்கப்படவுள்ளனர்.
காலியாக உள்ள 2,553 மருத்துவர் பணியிடங்களை நிரப்ப 24 ஆயிரம் மருத்துவர்கள் பங்கேற்கும் ஆன்லைன் தேர்வு ஜனவரி 27-ல் நடைபெறவுள்ளது. அதேபோல் 1,066 சுகாதார ஆய்வாளர் பணியிடங்கள், 2,250 கிராம சுகாதார பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படவுள்ளன” என்றார்.
சாமானியர்களுக்கும் தரமான மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயர்த்தி வருகிறது அரசு. அப்படி இருக்கையில், மருத்துவர்கள் உள்ளிட்ட பணியாளர்கள் பற்றாக்குறையால் அந்த நோக்கம் சிதைந்துவிடக் கூடாது!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT