Published : 18 Nov 2024 06:15 AM
Last Updated : 18 Nov 2024 06:15 AM
சென்னை: கிராம அளவிலான காங்கிரஸை மறுசீரமைக்க மாவட்ட வாரியாக பொறுப்பாளர்களை நியமித்து தமிழ்நாடு காங்கிரஸ் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் அமைப்பு செயலாளர் செ.ராம்மோகன் வெளியிட்ட அறிக்கை: பொதுமக்களுக்கும், காங்கிரஸுக்கும் உள்ள இடைவெளியை குறைத்து, காங்கிரஸின் சித்தாந்தங்கள் மற்றும் கொள்கைகளின் தேவைகளை இன்றைய இளைய தலைமுறையினருக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காக கட்சியின் அடிப்படை கட்டமைப்பை கிராம வார்டுகள் முதல் அனைத்து நிலைகளிலும் மறுசீரமைக்கப்படவுள்ளது.
எதிர்காலத்தில் காமராஜர் ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்ற லட்சியத்தை அடைய நமது இயக்கத்தை வலுப்படுத்துவது அவசியம். செல்வப்பெருந்தகையின் நோக்கத்தை நிறைவேற்ற, கிராம அளவிலான காங்கிரஸை முழுமையாக கட்டமைக்கும் பணி சேலம் மேற்கு மற்றும் நாமக்கல் கிழக்கு மாவட்டங்களில் தொடங்கப்பட்டது. அதேபோன்று அடுத்த 15 நாட்களுக்குள் முழுநேர பணியாக மாவட்ட காங்கிரஸ் தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டு, கிராம அளவிலான காங்கிரஸை மறுசீரமைக்க மாவட்ட வாரியாக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, சென்னை தென்கிழக்கு மாவட்டத்துக்கு அசன் மவுலானா எம்எல்ஏ, திருவள்ளூர் வடக்கு, தெற்கு, ஆவடி மாநகரம் ஆகியவற்றுக்கு சசிகாந்த் செந்தில் எம்.பி., கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு கோபிநாத் எம்.பி., திண்டுக்கல் மேற்கு, கரூர், திருச்சி தெற்கு, புதுக்கோட்டை வடக்கு ஆகிய மாவட்டங்களுக்கு ஜோதிமணி எம்.பி., புதுக்கோட்டை தெற்கு மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு கார்த்தி சிதம்பரம் எம்.பி. உள்ளிட்டோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்னர்.
காங்கிரஸில் இருந்து மனசோர்வாலும், கருத்து வேறுபாடுகளாலும் தற்காலிகமாக விலகி நிற்கும் காங்கிரஸ் தொண்டர்களை மீண்டும் கட்சி பணிகளில் முழுமையாக ஈடுபடுத்த வேண்டியது இக்குழுவின் கடமையாகும். புதிதாக உருவாகும் கிராம அளவிலான காங்கிரஸில் இளைஞர்கள், பெண்கள், பட்டியலின மக்கள், சிறுபான்மையினரை இடம்பெற செய்ய வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT