Published : 18 Nov 2024 05:37 AM
Last Updated : 18 Nov 2024 05:37 AM
சென்னை: வந்தே பாரத் ரயிலில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் வண்டு இருந்த விவகாரத்தில், ஒப்பந்ததாரருக்கு தெற்கு ரயில்வே ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது. திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் நேற்று முன்தினம் காலை புறப்பட்டது.
இந்த ரயிலில் சி-2 பெட்டியில் பயணித்த ஒருவருக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் வண்டு இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வெளியான வீடியோ காட்சி, இணையத்தில் வைரலானது.
சாம்பாரில் வண்டு இருந்தது குறித்து பயணி புகார் அளித்ததை தொடர்ந்து,அந்த பயணியிடம் அதிகாரிகள் வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கேட்டனர். உணவு விநியோகிக்கும் ஒப்பந்த நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்தனர். அந்த உணவை விநியோகம் செய்த ஒப்பந்ததாரரான பிருந்தாவன் ஃபுட் புராடக்ட்ஸ் நிறுவனத்துக்கு தெற்கு ரயில்வே ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது.
ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘‘சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்பட்டு, மேல் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ரயில்வே விரிவான விசாரணை நடத்துகிறது. பயணிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை உறுதி செய்வதில் ரயில்வே உறுதியாக உள்ளது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT