Published : 18 Nov 2024 06:21 AM
Last Updated : 18 Nov 2024 06:21 AM

10 ஆண்டுகளுக்கு பிறகு ரயில்வே அங்கீகார தேர்தல்: ஊழியர்களின் ஆதரவை பெற தொழிற்சங்கங்கள் இடையே கடும் போட்டி

சென்னை: ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில், தொழிற்சங்கங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. ஊழியர்களின் ஆதரவை பெற தொழிற்சங்க நிர்வாகிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரயில்வேயில் முதல் முறையாக 2007-ம் ஆண்டில் தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. அங்கீகாரம் பெறும் தொழிற்சங்கங்கள் மட்டுமே ரயில்வே நிர்வாகத்துடன் பேச்சு வார்த்தையில் பங்கேற்க முடியும். 2013-ல் நடைபெற்ற தேர்தலில், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்.ஆர்.எம்.யு.) 43 சதவீத வாக்குகளை பெற்று அங்கீகார தொழிற்சங்கமாக தேர்வு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.

கரோனா பாதிப்பு உள்ளிட்ட சில காரணங்களால், 2019-ம் ஆண்டுக்கு பிறகு தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் நடைபெறவில்லை. ரயில்வே தொழிற்சங்க அங்கீகாரத் தேர்தல் வரும் டிச.4, 5, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும் என ரயில்வே வாரியம் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அறிவித்தது.

இதற்கிடையே, ரயில்வேயில் உள்ள 17 மண்டலங்களில் பணியாற்றும், 12.20 லட்சம் ஊழியர்களின் ஆதரவைப் பெற ரயில்வே தொழிற்சங்கங்களின் சம்மேளனங்கள் தயாராகி வருகின்றன. தெற்கு ரயில்வேயில், எஸ்.ஆர்.எம்.யு. எனப்படும் தெற்கு ரயில்வே மஸ்துார் யூனியன், டி.ஆர்.இ.யு. எனப்படும் தட்ஷிண ரயில்வே தொழிலாளர் சங்கம், எஸ்.ஆர்.இ.எஸ். எனப்படும் தென்னக ரயில்வே தொழிலாளர் சங்கம் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், ரயில்வே அலுவலகங்கள், தொழிற்சாலைகள், குடியிருப்பு பகுதிகளில், தொழிற்சங்க நிர்வாகிகள் நேரில் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். அதுபோல, அவர்களது தேர்தல் வாக்குறுதிகளையும் எடுத்துரைத்து வருகின்றனர்.

இதுகுறித்து எஸ்.ஆர்.எம்.யு. பொதுச்செயலர் கண்ணையா கூறியதாவது: ரயில்வேயில் 80 சதவீத ஊழியர்களின் ஆதரவு எங்களுக்கு இருக்கிறது. ரயில்வே ஊழியர்களுக்கு நாங்கள் பல்வேறு சலுகைகளை பெற்று தந்துள்ளோம். ரயில்வே தொழிலாளர்கள் மட்டுமல்லாமல், அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கும் தேவையான உதவிகளை நலச் சங்கங்கள் வாயிலாக செய்து வருகிறோம்.

எங்களின் பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத் திட்டத்தில், ஊழியர்களிடம் பிடித்தம் செய்யும் 10 சதவீதமும் மீண்டும் ஊழியர்களின் பி.எப். கணக்கில் செலுத்தும் வகையில் தொடர் போராட்டத்தை நடத்துகிறோம். எங்களது சாதனைகள் ரயில்வே பணியாளர்களுக்கு நன்றாகவே தெரியும். எனவே, இந்த அங்கீகாரத் தேர்தலிலும் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, டி.ஆர்.இ.யு. மூத்த தலைவர் இளங்கோவன் கூறியதாவது: ரயில்வே ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவர வேண்டும். நாடு முழுவதும் உள்ள 3.12 லட்சம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறோம். தனியார் மயமாக்கலை எதிர்த்து தொடர்ந்து போராடி வருகிறோம். ஜனநாயக பூர்வமான தொழிற்சங்கமாக ஊழலற்ற தொழிற்சங்கமாக செயல்படுகிறோம். தற்போதுள்ள தொழிற்சங்கங்களின் தவறுகளையும், ரயில்வேயின் தவறான கொள்கைகளையும் சுட்டிக்காட்டி, ஊழியர்களின் ஆதரவை திரட்டி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

தெற்கு ரயில்வேயில் அங்கீகாரத் தேர்தலில் போட்டியிடும் ரயில்வே தொழிங்சங்கங்களின் இறுதிப்பட்டியலை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. இதில், தட்ஷின ரயில்வே ஊழியர்கள் சங்கம், தட்ஷின ரயில்வே கார்மிக் சங்கம், ரயில் மஸ்தூர் யூனியன், தெற்கு ரயில்வே ஊழியர்கள் சங்க், தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் ஆகிய தொழிற்சங்கங்கள் இடம்பெற்றுள்ளன. 10 ஆண்டுகளுக்கு பிறகு அங்கீகாரத் தேர்தல் நடைபெறவுள்ளதால், தொழிற்சங்கங்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. சுமார் 76 ஆயிரம் தொழிலாளர்கள் வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x