Published : 18 Nov 2024 05:45 AM
Last Updated : 18 Nov 2024 05:45 AM
சென்னை: கடற்கரை - தாம்பரம் இடையே நேற்று காலை முதல் மாலை வரை மின்சார ரயில் ரத்தால், பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்தனர். இதற்கு மாற்றாக, இயக்கப்பட்ட சிறப்பு ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
சென்னை ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் தண்டவாளம் பராமரிப்பு பணிகள் காரணமாக, அவ்வப்போது மின்சார ரயில் சேவை ரத்து செய்யப்படுகிறது. அந்த வகையில், தாம்பரம் பணிமனையில் நேற்று பராமரிப்பு பணி நடைபெற்றது. இதனால், சென்னை கடற்கரை - தாம்பரம் வரை மின்சார ரயில்கள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ரத்து செய்யப்பட்டது.
சென்னை கடற்கரை - பல்லாவரம், பல்லாவரம் - சென்னை கடற்கரை வரை 45 நிமிட இடைவௌியில் ஒரு சிறப்பு ரயில் இயக்கப்பட்டது. இதேபோல, சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர் மற்றும் அரக்கோணம் ரயில்கள் ரத்து செய்யப்படாமல் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்பட்டது.
கூட்டம் அலைமோதியது: நேற்று விடுமுறை தினம் என்பதால் காலை முதலே ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதி காணப்பட்டது. குறிப்பாக தாம்பரம் ரயில் நிலையத்தில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. தாம்பரத்தில் இருந்த கடற்கரைக்கு வர பேருந்து மூலமாக, பயணம் செய்தால் நேரமும், பணமும் செலவு என்பதால் ரயிலுக்காக காத்திருந்து பயணித்தனர்.
ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில்: தாம்பரம் வழியாக செங்கல்பட்டுக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு ரயில் என்ற அடிப்படையில் இயக்கப்பட்டது. இதில் நிற்பதற்கு இடம் இல்லாத அளவுக்கு அபாயகரமான முறையில் தொங்கியபடியும் பயணித்தனர்.
ரயில்கள் ரத்தால் , தாம்பரத்தில் இருந்து பல்லாவரம், தியாகராயநகர் மற்றும் பிராட்வே ஆகிய பகுதிகளுக்கு 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. இதனால் பேருந்து நிலையத்திலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT