Last Updated : 17 Nov, 2024 05:33 PM

1  

Published : 17 Nov 2024 05:33 PM
Last Updated : 17 Nov 2024 05:33 PM

46 ஆண்டு நிலுவை வழக்கில் சுமுக தீர்வு: உயர் நீதிமன்றம் மதுரை கிளை மகிழ்ச்சி

மதுரை: ‘ராஜபாளையத்தில் வாடகை இடத்தை காலி செய்வது தொடர்பாக 46 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில் சுமுக தீர்வு காணப்பட்டது மகிழ்ச்சியானது’ என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விதுருநகர் மாவட்டம் ராஜபாளையம் புதுபாளையம் சக்கராஜாகோட்டை நந்தவனத்துக்கு சொந்தமான சொத்தில் வாடகைக்கு இருந்தவர்களை காலி செய்வது தொடர்பான வழக்கு ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் 46 ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தது. வழக்கு தொடர்ந்தவர், வாடகைதாரர்கள் பலர் இறந்த நிலையில் அவர்களின் வாரிசுதாரர்கள் வழக்கை நடத்தி வந்தனர்.

சம்பந்தப்பட்ட சொத்தின் காலியிடம் ரைஸ்மில் நடத்த 1979-ல் வாடகைக்கு விடப்பட்டது. வாடகை பிரச்சினை காரணமாக வாடகைதாரர்கள் காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்ததால் உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதி டி.பரதசர்க்கரவர்த்தி விசாரித்தார். இரு தரப்பிலும் சமூக தீர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் வழக்கு சமரச தீர்வு மையத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கு சமரசம் ஏற்படாமல் வழக்கு மீண்டும் நீதிமன்றத்துக்கே வந்தது. பின்னர் விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டது. தீர்ப்பு நாளில் அனைவரும் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

மூடி முத்திரையிட்ட உறையில் தீர்ப்பு தயாராக இருக்கும் நிலையில், அதை பிரித்து படிப்பதற்கு முன்பு இந்த விவகாரத்தை இரு தரப்பு வழக்கறிஞர்கள் உதவியுடன் சுமுகமாக முடிக்க விரும்புவதாகவும், இதனால் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளிவைத்தனர்.

மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது இரு தரப்பினும் சமரசமாக செல்வதாக மனு தாக்கல் செய்தனர். இதை ஏற்று வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: 46 ஆண்டு வழக்கு இறுதிக் கட்டத்துக்கு வந்துள்ளது. இந்த வழக்கு நீதிமன்றத்துக்கு பல கலவையான உணர்வுகளை தந்துள்ளது. பழைய வழக்கு விசாரணைக்கு வராமல் இருந்தது. வருத்தம் அளிக்கிறது. பழைய வழக்காக இருந்தாலும் அந்த வழக்கு உரிய கவனம் பெற்றிருக்க வேண்டும்.

பழைய வழக்குகளை விரிவாக விசாரிக்க வேண்டும். இதை கருத்தில் கொண்டு சட்டப்படி அனைத்து தரப்புக்கும் உரிய வாய்ப்புகளை வழங்கி வழக்குகளை முடிக்க வேண்டும். 46 ஆண்டு வழக்கு சுமுகமாக முடித்து வைக்கப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த வழக்கில் தகுதி அடிப்படையில் நீதிமன்றம் தயாரித்த உத்தரவு மூடி முத்திரையிட்ட உறையில் அப்படியே இருக்கிறது. அது அப்படியே இருந்துவிட்டு போகட்டும். இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x