Published : 17 Nov 2024 04:07 PM
Last Updated : 17 Nov 2024 04:07 PM
புதுச்சேரி: புதுச்சேரி அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களை ஒவ்வொன்றாக விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் புதுச்சேரியையே விற்பனை செய்யக்கூடிய அளவுக்கு பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் செயல்பாடுகள் உள்ளது என்று அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
இது குறித்து அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் பாஜக- என்.ஆர். காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைந்ததில் இருந்து அரசுக்கு சொந்தமான பல சொத்துக்கள் விஞ்ஞான ரீதியில், சட்ட விரோதமாக தனியாருக்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்கெனவே விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்ட சிறப்பு பொருளாதார மண்டலத் திட்டம் முழுமையாக கைவிடப்பட்ட நிலையில், அங்கு உள்ள இடங்கள் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களுக்கும், பல வெளிமாநில தொழில் அதிபர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கப்படுகிறது.
அரசுக்கு சொந்தமான எந்த இடத்தை விற்பனை செய்வதாக இருந்தாலும் துணைநிலை ஆளுநரின் அனுமதியும், மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியும் பெற்று தான் விற்பனை செய்யப்பட வேண்டும். புதுச்சேரி அரசானது சர்வ சாதாரணமாக தனக்கு வேண்டியவர்களுக்கு இடத்தை தாரை வார்த்து வருகிறது.
இதையெல்லாம் துணைநிலை ஆளுநர் தடுத்து நிறுத்துவார் என்ற எண்ணம் எங்களுக்கு உண்டு. ஆனால் ஆளுநர் இதில் வெறும் பார்வையாளராகவே உள்ளார். அரசு செலுத்த வேண்டிய வரி பாக்கிக்கு அரசு இடத்தை ஏலத்துக்கு கொண்டு வருவது என்பது இந்த அரசு வெட்கப்பட்டு தலைகுனிய வேண்டும். இதன் மீது துணைநிலை ஆளுநர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏலத்தை தடுத்து நிறுத்த வேண்டும். ஏற்கெனவே அரசு நிலங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களை ஒவ்வொன்றாக விற்பனை செய்து வருகிறது. இதன் மூலம் புதுச்சேரியையே விற்பனை செய்யக்கூடிய அளவுக்கு புதுச்சேரி பாஜக-என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசின் செயல்பாடுகள் உள்ளது. பல கூட்டுறவு நிறுவனங்கள் செயற்கையாக மூடப்பட்டுள்ளது. அவற்றுக்கு சொந்தமான இடங்களையும் இந்த அரசு விற்பனை செய்து வருவது என்பது வெட்கக்கேடானது. எனவே துணைநிலை ஆளுநர் அரசு மற்றும் அரசு சார்ந்த சொத்துக்களை காப்பாற்றுவதற்காக ஒரு உயர் மட்ட கமிட்டியை அமைக்க வேண்டும்.
அரசு சார்ந்த நிலங்கள் தனியாருக்கு குறுக்கு வழியில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. அப்படி இருந்தால் அதனை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். புதுச்சேரி அரசின் மக்கள் விரோத போக்கு, அரசு வரிப்பணத்தை தான்தோன்றித்தனமாக செலவு செய்வது போன்ற அரசு நடவடிக்கைகளை ஆளுநர் தடுத்து நிறுத்த வேண்டும். வெறும் பார்வையாளராக மட்டும் இருக்கக் கூடாது. என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT