Published : 17 Nov 2024 01:40 PM
Last Updated : 17 Nov 2024 01:40 PM

“எங்களது அளவுகோல் 40 சீட் தானா... அதற்கு மேல் இருக்கக் கூடாதா?” - செல்வப்பெருந்தகை நேர்காணல்

செல்வப்பெருந்தகை

தேர்தல் பிரச்சாரத்துக்காக மகாராஷ்டிராவில் இருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகையை பேட்டிக்காக தொடர்பு கொண்டோம். “சென்னை திரும்பியதும் நேரில் பேசுவோமா” என்றார். அதன்படியே சென்னை திரும்பியதுமே அவரை நேரில் சந்தித்தோம். அப்போது அவரிடம் பேசியதிலிருந்து...

ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று சொல்லி விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் திமுகவுக்கு நெருக்கடி தருவதாக சொல்லப்படுவது பற்றி..?

“விசிகவாகட்டும், மற்ற கூட்டணிக் கட்சிகளாகட்டும் அது அவர்களுடைய கட்சிப் பிரச்சினை. எங்கள் கட்சியைப் பொறுத்தவரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி வழிகாட்டுதலின்படிதான் நாங்கள் இங்கு எதைப்பற்றியும் பேச முடியும். எந்த தேசிய கட்சியும் அகில இந்திய தலைமைக்கு கட்டுப்பட்டு, அதன் முடிவை நோக்கித்தான் செல்லும். அதேவேளையில் தமிழ்நாட்டின் அரசியல் நிலவரம், தமிழக மக்களின் மனநிலை பற்றி தலைமைக்கு நாங்கள் தெரியப்படுத்துவோம். அந்த விதத்தில் எல்லா வகையிலும் முடிவெடுக்க வேண்டியது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிதான்.”

எட்டு, பத்து எம்.பி. சீட்களுக்கும் இருபது முப்பது எம்எல்ஏ சீட்களுக்குமே கூட்டணி தலைமைக்கு காவடி தூக்கிக் களைத்துப் போகும் தமிழக காங்கிரஸ் கட்சி, காமராஜர் ஆட்சியை அமைப்போம் என்று சொல்வதெல்லாம் காமெடி அரசியல் என்று சொல்லப்படுவதை எப்படி கடக்கிறீர்கள்?

“எந்தக் கட்சி வேண்டுமானாலும் காமெடி பேசலாம். உலகத்திலேயே மிகவும் பழமையான கட்சி என்றால் அது காங்கிரஸ்தான். இரண்டு நூற்றாண்டுகளை காணப் போகிறது. நாட்டு விடுதலைக்காகவும் மக்களின் நலனுக்காகவும் தொடங்கப்பட்ட கட்சி. எனக்கு தெரிந்தவரை எங்கள் கட்சியில் இருப்பதைப் போல கொள்கை, கோட்பாடு, வரலாறு, சித்தாந்தம் வேறு எந்தக் கட்சியிலும் இல்லை. இதைப் போய் காமடி என்று சொன்னால் அவர்கள்தான் காமெடியனாக மாறுவார்கள்.

யாரோ ஒரு சிலர் தவறு செய்தார்கள் என்பதற்காக ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியையும் பழிப்பதும், தவறான விமர்சனங்களைச் செய்வதும் சரியாக இருக்காது. எல்லா தலைமையும் ஏற்கிற தகுதி காங்கிரசுக்கு இருக்கிறது. எனவே, 8 சீட், 10 சீட் என தொண்டர்கள் பேசுகிறார்கள் என்றால், அது அவர்கள் அடிமனதில் இருந்து வருகிறது. அதற்காக கட்சியைப் பலப்படுத்த வேண்டும். கிராம கமிட்டிகளை அமைக்க வேண்டும். முகவர்கள் வாக்குச்சாவடியை சரி செய்ய வேண்டும். 100 சதவீதம் யார் கிராம கமிட்டி அமைக்கிறார்களோ அவர்கள் கவுரவிக்கப்படுவார்கள்.

வேலை பார்க்காதவர்களை எல்லாம் கட்சியில் வைத்திருப்பதில்லை என்று முடிவெடுத்துள்ளோம். வேலை செய்தால் உரிய அங்கீகாரம் கிடைக்கும். காமராஜர் ஆட்சியை நோக்கித்தான் 8 மாதங்களாக பயணித்துக் கொண்டிருக்கிறோம். எங்களிடம் முழுமையாக கிராம கமிட்டிகள் இருக்கின்றன என்பதை விரைவில் இணையதளத்தில் போடப் போகிறோம்.”

அதிகாரத்தில் பங்கு தர தயார் என்று சொல்லியிருக்கும் விஜய், வரும் தேர்தலில் காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி தருவதாக ஆஃபர் கொடுத்தால் காங்கிரஸ் என்ன முடிவெடுக்கும்?

“இப்போதைக்கு அதைப்பற்றி யோசிப்பதற்கு வாய்ப்பில்லை. திமுக கூட்டணிக் கட்சிகள் ஒற்றுமையாக இணக்கமாக இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். இந்தியா கூட்டணியை வலிமை பெறச் செய்வதற்கான வேலையைச் செய்து கொண்டிருக்கிறோமே தவிர, அங்கு தாவலாம், இங்கு தாவலாம், 50 சீட் அதிகமாக கொடுப்பார்கள் என்ற இடத்தில் காங்கிரஸ் கிடையாது. விஜய் விருப்பம் தெரிவிக்கிறார் என்றால் மகிழ்ச்சி; வாழ்த்துகள். இது குறித்து முடிவெடுப்பது கட்சியின் தேசிய தலைமைதான்.”

எங்கு பார்த்தாலும் லஞ்சம், முறைகேடுகள் தறிகெட்டு நிற்கிறது என்று சொல்லப்படுவதை நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்களா?

“இந்த கருத்தை ஆமோதிப்பதும், எடுத்துக் கொள்வதும் நாம் கிடையாது; மக்கள்தான். சரியான முறையில் ஆட்சி செய்தால் மக்கள் அடுத்த வாய்ப்புக் கொடுப்பார்கள். சரியான முறையில் ஆட்சி செய்யவில்லை, நீங்கள் சொல்வதைப் போல நடந்து கொண்டால் அடுத்த முறை மக்கள் நிராகரிப்பார்கள். அதுதான் எதார்த்தம். அது இந்திய வரலாறாக ஆகட்டும், தமிழக வரலாறாக ஆகட்டும். ஆகவே அதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.”

இன்னும் ஒன்றரை ஆண்டுகள்தான் இந்த ஆட்சியின் ஆயுட்காலம். கடந்த மூன்றரை ஆண்டுகளில் தமிழக மக்களுக்கு திமுக நல்லாட்சியை தந்திருப்பதாக பிரதான கூட்டணிக் கட்சி என்ற முறையில் உங்களால் நற்சான்று தர முடியுமா?

“அதில் மாற்றுக் கருத்து இல்லை. நல்லாட்சிதான் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். சில நிதிப் பற்றாக்குறை, நிதி சேதாரங்கள், நிதி மேலாண்மையில் கொஞ்சம் பிரச்சினை இருக்கிறது. நிதி நிலைமையை சரி செய்ய வேண்டும். நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யும்போது பற்றாக்குறை இல்லாத பட்ஜெட்டாக தாக்கல் செய்ய வேண்டும். அதற்கான வாய்ப்புகள் நீண்ட, நெடிய தூரமாக உள்ளது. அதற்கான வாய்ப்புகள் இப்போது இல்லை. முக்கிய திட்டங்களைக் கொண்டு வருவதென்றால் அதற்கு இப்போது நிதி கிடையாது. அதுதான் இப்போதைய நிலை. மத்திய அரசு தமிழக அரசை முற்றிலுமாக புறக்கணிக்கிறது. கேட்ட நிதியைக் கொடுப்பதில்லை.”

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளை விமர்சிக்க வேண்டாம் என்று எடப்பாடி பழனிசாமி அதிமுகவினருக்கு அட்வைஸ் செய்திருப்பதை நீங்கள் எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள்?

“அது அவருடைய பெருந்தன்மை.”

2026 பேரவைத் தேர்தலில் மீண்டும் காங்கிரசுக்கு அதே 25 தொகுதிகள் தான் ஒதுக்கப்படும் என திமுக சொன்னால் அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லையா? இம்முறை 40 சீட்கள் வரை கேட்பீர்கள் எனக் கூறப்படுகிறதே?

“எங்களது அளவுகோல் 40 சீட் தானா... அதற்கு மேல் இருக்கக்கூடாதா எனக் கேட்கிறேன். இந்தத் தேர்தல் தொகுதி அடிப்படையிலான தேர்தல் இல்லை. இது பாசிச சக்திகளை விரட்ட வேண்டும். மதவாத சக்திகளை அகற்ற வேண்டும் என்பதற்கான தேர்தல். எத்தனை தொகுதிகள் வாங்குவது, எந்தெந்த தொகுதிகளை எடுப்பது என்பதையெல்லாம் அகில இந்திய காங்கிரஸ் முடிவுக்கு நாங்கள் விட்டுவிடுவோம். இருக்கின்ற நிலைமையை நாங்கள் எடுத்துச் சொல்லி, அவர்கள் வழிகாட்டுதலின்பேரில் பேச்சுவார்த்தை நடத்தப்படும். சீட்களை குறைத்தோ, அதிகப் படுத்தியோ வாங்குவது, என்ன பேச வேண்டும் என்பது போன்ற வரையறையை தேசிய தலைமை கொடுக்கும். இதில், தமிழக காங்கிரஸ் எந்த முடிவையும் எடுக்காது.”

கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட விஷயங்கள் பற்றி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைமை முடிவெடுப்பதால் தான் பல இடங்களில் சறுக்கல் ஏற்படுகிறது. முடிவுகளை எடுக்கும் அதிகாரத்தை மாநில தலைமையிடம் தந்தால் மட்டுமே பிராந்திய அளவில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த முடியும் என்று சொல்லப்படுவதை நீங்கள் ஆமோதிக்கிறீர்களா?

“பிராந்திய கட்சியின் அரசியல் வேறு, தேசிய கட்சியின் அரசியல் வேறு. மாநிலக் கட்சிகளைப் பொறுத்தவரை அந்தந்த மாநிலத் தலைவர்களே முடிவெடுப்பார்கள். தேசிய கட்சியைப் பொறுத்தவரை நாட்டின் தட்ப வெப்பநிலை, அரசியல் பிரச்சினைகள் அனைத்தையும் அணுகி, கூட்டிக் கழித்துப் பார்த்து முடிவெடுக்கப்படும். காங்கிரஸ், பாஜக, பொதுவுடைமை கட்சிகள் என எந்த தேசிய கட்சியாக இருந்தாலும் மாநில அளவில் முடிவெடுக்க முடியாது. அதற்காக அது சறுக்கல் கிடையாது. அதே சமயம் எங்களுக்கு முழு உரிமை, அதிகாரத்தை கொடுக்கவில்லை என்று அர்த்தம் கிடையாது.

கிராம, பூத், வட்டார, நகர, பேரூர், மாவட்ட, மாநில கமிட்டி என எல்லா கமிட்டிகளையும் 24 மணி நேரம் வேலை பார்க்கச் சொல்கிறோம். அதில் தேவையான மாற்றங்களை செய்யப் போகிறோம். அது எங்களுக்கான உரிமை. அதற்கு தேசிய தலைமை தடையாக இல்லை. நீங்கள் பரிந்துரை செய்யுங்கள். நாங்கள் அதற்கு ஒப்புதல் அளிக்கிறோம் என்று தான் தேசிய தலைமை சொல்லியுள்ளது. தேசிய கட்சிகளுக்கு உள்ள ஒரேயொரு இடர்பாடு இதுதான். நாங்கள் நினைத்தவுடன் முடிவெடுத்துவிட முடியாது.”

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x