Published : 23 Jun 2018 05:09 PM
Last Updated : 23 Jun 2018 05:09 PM

காரைக்குடியில் வியாபாரி வீட்டில் திருடிய மூன்று பேர் கைது; கணக்கில் காட்டப்படாத ஹவாலா பணம் ரூ. 2.70 கோடி பறிமுதல்

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் வியாபாரி வீட்டில் ரூ. 2 கோடியே 70 லட்சம் திருடிய ஓட்டுநர் உட்பட மூன்று பேரை காரைக்குடி போலீஸார் கைது செய்தனர். இதில் கணக்கில் காட்டப்படாத ரூ. 2 கோடி இந்தியப் பணமும், ரூ. 70 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (50). இவர் காரைக்குடி பர்மா பஜாரில் வெளிநாட்டுப் பொருட்கள் விற்பனைக் கடை வைத்துள்ளார். மேலும், வெளிநாட்டில் உள்ள தொழிலாளர்களுக்கு உள்ளூரில் உள்ள அவர்களது வீடுகளுக்குச் சென்று பணப் பரிவர்த்தனையும் செய்து வருகிறார். இவரிடம் பர்மா காலனியைச் சேர்ந்த நாராயணன் வாகன ஓட்டுநராக உள்ளார்.

சுப்பிமணியனின் சித்தி சிட்டாள் ஆச்சி, காரைக்குடி சுப்பிரமணியபுரம் 1-வது வீதியில் உள்ளார். இவரது வீட்டில் உள்ள லாக்கரில் சுப்பிரமணியன் பாதுகாப்பு கருதி பணத்தை வைத்துள்ளார். இங்கு சென்று பணம் எடுத்து வரச்சொல்லும் போதெல்லாம் ஓட்டுநர் நாராயணன், சிட்டாள் ஆச்சி வீட்டிற்கு சென்று பணம் வாங்கிக் கொடுத்து நம்பிக்கையைப் பெற்றுள்ளார்.

இதனிடையே, இரண்டு நாட்களுக்கு முன் ஓட்டுநர் நாராயணன், சிட்டாள் ஆச்சி வீட்டிற்குச் சென்று ஒரு காலி லாக்கர் பெட்டியைக் கொடுத்துவிட்டு, பணமுள்ள பெட்டியை சுப்பிரமணியன் வாங்கி வரச்சொன்னதாக பொய் சொல்லி பணப்பெட்டியை எடுத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் வியாழக்கிழமை மாலையில் சித்தி வீட்டிற்கு சுப்பிரமணியன் சென்றுள்ளார். அப்போது சித்தி, 'ஓட்டுநர் நாராயணன், நீ வாங்கி வரச்சொன்னதாக பணப்பெட்டியை வாங்கிச் சென்றார்' என தெரிவித்தார். இதில் அதிர்ச்சி அடைந்த சுப்பிரமணியன், நான் பணம் வாங்கி வரச் சொல்லவில்லையே, என பதில் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுப்பிரமணியன், காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஓட்டுநர் நாராயணன் ரூ. 40 லட்சம் பணத்தை திருடிச் சென்றதாக புகார் தெரிவித்தார். அவரது புகாரில் டிஎஸ்பி கார்த்திகேயன் விசாரணை மேற்கொண்டார். இன்ஸ்பெக்டர் தேவகி, சப்-இன்ஸ்பெக்டர்கள் சரவணன், அரவிந்தன், மணிமொழி ஆகியோர் தலைமறைவான நாராயணனைப் பிடித்து விசாரித்ததில் பணம் திருடியதை ஒப்புக்கொண்டார்.

அதில் ரூ. 2 கோடி இந்தியப் பணம், ரூ. 70 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளைத் திருடியதாகவும், அதனை உறவினரான காரியாபட்டியைச் சேர்ந்த செல்வராஜ் என்பவரிடம் கொடுத்துள்ளதாகவும், அவர் ராமநாதபுரம் நிருபர் காலனியைச் சேர்ந்த சேகர் என்பவரிடமும் கொடுத்து வைத்ததாக தெரிவித்துள்ளார். அந்த மூன்று பேரையும் இன்று (சனிக்கிழமை) கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 2 கோடி மதிப்பிலான இந்திய பணமும், ரூ. 70 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து டிஎஸ்பி கார்த்திகேயன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ’’சுப்பிரமணியன் தனது வீட்டில் ரூ. 40 லட்சம் பணத்தை ஓட்டுநர் நாராயணன் திருடிச் சென்றதாகப் புகார் தெரிவித்தார். அவரது ஓட்டுநர் நாராயணனைக் கைது செய்து விசாரித்ததில், அவரது உறவினர் செல்வராஜ் (44), சேகர் (35) ஆகியோரிடமிருந்து ரூ. 2 கோடி இந்தியப் பணமும், ரூ. 70 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் மூன்று பேரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளோம். பணத்தையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்துள்ளோம். மேலும் கணக்கில் காட்டப்படாத இப்பணம் குறித்து அமலாக்கத்துறை, வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளோம்’’ என்றார். 

புகார் அளித்த ஒரே நாளில் துரிதமாக நடவடிக்கை எடுத்த டிஎஸ்பி மற்றும் தனிப்படையினரை சிவகங்கை மாவட்ட டிஎஸ்பி டி.ஜெயச்சந்திரன் பாராட்டு தெரிவித்தார் 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x