Last Updated : 22 Jun, 2018 01:00 PM

 

Published : 22 Jun 2018 01:00 PM
Last Updated : 22 Jun 2018 01:00 PM

புதுச்சேரியில் முஸ்லிம்கள் கட்டி நிர்வகித்து வரும் முருகன் கோயில் கும்பாபிஷேகம்

புதுச்சேயில் முருகன் ஆலயத்தை கட்டி முஸ்லிம்கள் நிர்வகித்து வருகின்றனர். தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

புதுச்சேரி ரயில்வே நிலையம் அருகே ஸ்ரீ கௌசிக பாலசுப்பிரமணியர் திருக்கோயில் உள்ளது. இக்கோயிலில் வள்ளி, தெய்வானை உடனுறை கௌசிக பாலசுப்பிரமணியரை தரிசிக்க அனைத்து மதத்தினரும் வருகின்றனர். இக்கோயிலை கட்டியவர் முகமது கௌஸ். அவருக்கு பிறகு இக்கோயில் நிர்வாகிகளாக இவரது குடும்பத்தினர் உள்ளனர்.

இக்கோயிலை கட்டிய முகமது கெளஸ், சுவாமி உற்சவர் அலங்காரம் செய்து வந்தார். சிறு வயதில் இருந்தே முருகக்கடவுள் மீது அவருக்கு விருப்பமிருந்தது. தற்போது முருகன் கோயில் முன்பகுதியில் 1969-ல் துளசி முத்து மாரியம்மன் கோயி்ல் கட்டி கும்பாபிஷேகத்தை நடத்தினார். அதன்பிறகு மாரியம்மன் கோயிலுக்கு பக்கத்திலேயே முருகன் கோயில் கட்ட முடிவு எடுத்தார்.

1970-ல் அப்போது இருந்த துணைநிலை ஆளுநர் ஜாட்டி, மேயர் எதுவர் குபேர் பங்கேற்புடன் முருகன் கோயில் பணிகளை தொடங்கினார். நிதி திரட்டி, கையில் இருந்த பணத்துடன் சுமார் 7 ஆண்டுகளுக்காக உழைத்து அவர் கட்டிய கோயிலுக்கு 1977-ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கோயில் கட்டியவரின் பெயருடன் இணைந்து ஸ்ரீ கௌசிக பாலசுப்பிரமணிய சாமி கோயில் என பெயர் வைக்கப்பட்டது. இக்கோயிலுக்கு கடந்த 2002-ல் இரண்டாவது முறையாக கும்பாபிஷேகம் நடந்தது.

கோயிலை கட்டிய கெளஸ் மறைவுக்கு பிறகு இக்கோயிலை அவரது குடும்பத்தினர் நிர்வகித்து வருகின்றனர்.

இந்நிலையில் இக்கோயிலுக்கு கும்பாபிஷேகத்துக்கான பணிகள் சில ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கின. திருக்கோயில் பணிகள் நிறைவடைந்து யாக வேள்வி கடந்த 16-ம் தேதி தொடங்கியது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.45 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 16 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்.

கோயில் நிர்வாகிகளில் ஒருவராக கெளஸின் மகனான காதர் இருக்கிறார். தந்தைக்கு பிறகு கோயில் பொறுப்பை எடுத்து செய்து வருவதாகவும், கோயிலில் அனைத்து திருவிழாக்கள், பூஜைகளை சரியாக செய்து வருவதாகவும் குறிப்பிடுகிறார்.

மதம் பார்க்காமல் அனைத்து கடவுளையும் வணங்கும் மக்கள் இங்குதான் இருக்கின்றனர் என்பதற்கு உதாரணமாய் திகழ்கிறது இத்திருக்கோயில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x